இஸ்லாமிய இளைஞரை பாகிஸ்தான் காரன் என்று திட்டிய அமைச்சர் பெஞ்சமின்…! வீடியோ இணைப்பு

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஆட்சி அதிகாரப் போட்டி காரணமாக, ஆளும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என இரண்டு அணியாக பிரிந்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பட்ட காய் நகர்த்தல்களின் ஒருபகுதியாக, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் சுமார் ஒருவார காலம் தங்க வைக்கப்பட்டனர். தங்களை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு, அவரவர் மனசாட்சிப்படி, அரசுக்கு பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது எம்.எல்.ஏக்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று பரவலாக குரல்கள் ஒலித்தன.

கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களின் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகின. தொகுதி மக்கள் பெரும்பாலானோர் தங்களின் எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முயன்றனர். தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால், எம்.எல்.ஏக்கள் தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டனர். இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. அப்படியும், பொதுமக்களின் தொடர்பில் சிக்கிய சில எம்.எல்.ஏக்கள் ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக அம்பத்தூர் எம்.எல்.ஏ அலெக்சாண்டர், அவருடைய தொகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய ஆடியோ மிகவும் வைரலானது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு உறுதியானதை அடுத்து அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் பெங்களூரு செல்லும் முன்னர், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து அறிவித்தார். அதுவரை, அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்புடன் தகித்துக் கொண்டிருந்த அரசியல் களம், சற்றே தணிந்தது.

தொகுதிக்கு போகிறார்களா?

இந்த நிலையில், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிப்பக்கம் செல்லாமல் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே முடங்கி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், “நாங்கள் தொகுதிக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறோம்” என சில எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே கூறி வந்தனர். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு போகிறார்களா? என்ற சந்தேகம் இன்றையதேதி வரை நீடித்துக் கொண்டிருக்கையில். பொதுமக்களையும் எம்.எல்.ஏக்களையும் சந்திப்பதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் தன்னார்வ இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். ‘#CoffeeWithMLAs’ என்று பெயரிட்டுள்ள இந்த நிகழ்ச்சியை அறப்போர் இயக்கம் முன்னெடுத்து நடத்துகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

‘பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறாயா?’

பெஞ்சமின் எம்.எல்.ஏக்கள் அழைப்பின் ஒரு பகுதியாக, தொலைபேசியில் அவர்களைத் தொடர்புகொண்டு, அக்தர் அஹமது என்பவர் பேசியுள்ளார். அப்போது, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா. பெஞ்சமினை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் வாய்க்கு வந்தபடி தாறுமாறாகப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழைத்தவரின் பெயரைக் கேட்டவுடன், “பாகிஸ்தான்காரன் மாதிரியே நீ பேசுகிறாயே” என்று வினவியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ அறப்போர் இயக்க வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், கேள்விகளை முன்வைக்கும் அக்தர் அஹமது, அமைச்சரிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்டுக்கொண்டே செல்கிறார். சில இடங்களில் இருவரின் உரையாடலும் தெளிவாக கேட்க முடியாமல் உள்ளது.

நன்றி: விகடன்

வீடியோ: 

Close