சிரியாவில் 2016 ல் காவு வாங்கப்பட்ட 652 குழந்தைகள்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கடந்த ஆண்டு மட்டும் 652 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப் வேதனை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சிரியாவில் குழந்தைகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளையும் அது பட்டியல் இட்டுள்ளது.

சிரியாவில் குழந்தைகளின் நிலை பற்றிய யுனிசெப் அமைப்பின் சில ஆய்வு முடிவுகள்:

சிரியாவில் அதிபர் Bashar al-Assad-க்கு எதிராக பல்வேறு ஆயுதக் குழுக்கள் கடந்த 6 ஆண்டுகளாக போரிட்டு வருகின்றன. இதனால், பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. சிரியாவில் குழந்தைகள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்களை, கடந்த 2014ம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறது யுனிசெப்.

அதன்படி, சிரிய நாட்டு குழந்தைகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு மிகத் துயரமான ஆண்டாக அமைந்திருந்ததாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த 2016ம் ஆண்டில், சிரியாவில் குழந்தைகள் உயிரிழப்பு 20 சதவீதம் அதிகம் இருந்ததாகவும், தாக்குதல்களால் மொத்தம் 652 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பள்ளியில் இருந்தபோது கொல்லப்பட்ட குழந்தைகள்:

தாக்குதல்களால் கொல்லப்பட்ட 652 குழந்தைகளில் 255 குழந்தைகள் பள்ளியில் இருந்தபோது கொல்லப்பட்டதாகவும் யுனிசெப் தன் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், போரில் சண்டையிடுவதற்காக 850 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள யுனிசெப், கடந்த 2015ம் ஆண்டைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம் என கூறியுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் யுத்த களத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடவும், தற்கொலைப் படையாக செயல்படவும், சிறைகளை கவனித்துக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

சிரியாவை சேர்ந்த குழந்தைகள் சந்தித்த துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவை என குறிப்பிட்டுள்ள யுனிசெப், ஒவ்வொரு நாளும் கொடூரமான சூழலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக அவர்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் சிக்கிக் கொண்டு உணவுக்கும் வழியின்றி தவித்ததாகவும், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைத் தாண்டி, நோய் தாக்குதலால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்ததாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

உதவிகள் எட்ட முடியாத இடத்தில் இருக்கும் குழந்தைகள்:

மருத்துவ உதவிகள், உணவுப் பொருட்கள், அடிப்படைத் தேவைகள் சென்றடைய முடியாத போர் பகுதிகளில், தற்போதும் கூட, 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் சிக்கிக் கொண்டிருப்பதாக யுனிசெப் குறிப்பிட்டுள்ளது. 60 லட்சம் குழந்தைகள் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிரியாவில் இருந்து வெளியேறி, துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் நாடுகளில் 23 லட்சம் குழந்தைகள் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் கூறியுள்ளது.

சிரியாவில் உள்ள மூன்றில் இரண்டு குடும்பங்கள், சிறுவர்கள் பணி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், பெண் குழந்தைகள், திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பிரச்னைக்கு தீர்வாக யுனிசெப் கூறும் அறிவுரை:

குழந்தைகள் சந்தித்து வரும் இந்த பிரச்னைகள் முடிவுக்கு வர வேண்டுமானால், சண்டை முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ள யுனிசெப், சர்வதேச சமூகம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author