பட்டுக்கோட்டை அருகே ஜாதிக்கொடுமை! மொத்தமாக ஊரை காலி செய்த மக்கள்!

பட்டுக்கோட்டையை அடுத்த செண்டாங்காட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் குடியேற உடைமைகளுடன் வந்த கிராம மக்கள் கலெக்டர் அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.

உடைமைகளுடன் வந்த கிராமமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த செண்டாங்காடு கீழத்தெருவை சேர்ந்த ஆண்கள், பெண்களுடன் 100–க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுடன், ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார் தலைமையில் தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்ககுமரவேல், ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழகம் சின்னராஜ் ஆகியோர் முன்னிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதற்காக உடைமைகளுடன் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த போது அவர்களை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்துச்செல்வதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயினுலாபுதீனிடம் அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் அளித்த உறுதியை கிராம மக்கள் ஏற்கவில்லை.

கலெக்டர் பேச்சு வார்த்தை
கலெக்டர் தெரிவித்தால் தான் நாங்கள் இங்கிருந்து கிளம்புவோம் என கிராமமக்கள் கூறினர். இதையடுத்து குடிமராமத்து பணியை தொடங்கி வைப்பதற்காக சென்ற கலெக்டர் அண்ணாதுரை 3.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் கிராம மக்கள் பேச்சு வார்த்தை நடத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு விழாவை நாங்கள் நடத்தினோம். அப்போது இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் எங்களின் வீடு, வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி ஆண்கள், பெண்களை தாக்கினர். இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விழாவில் பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கி சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

நிவாரணம் வழங்கப்படவில்லை
இது குறித்து பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை திரும்ப பெற வைக்கும் நோக்கில் போலீஸ்காரர் அடைக்கலகுமார், ஆதிதிராவிடர் பள்ளி விடுதி காப்பாளர் கண்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது பொய் புகார் கொடுத்து வேலைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி 8 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதியை நிலைநிறுத்த வேண்டும்.

மேலும் நாங்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக இருப்பதால் எங்களுக்கு வேலையும் மறுக்கப்படுகிறது. இதனால் வெளியூருக்கு பிழைப்பு தேடி செல்ல வாகன வசதியும் இல்லை. சேதப்படுத்தப்பட்ட எங்களின் உடைமைகளுக்கு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இந்த சமுதாயத்தில் வாழ வழிதெரியாமல கலெக்டர் அலுவலகத்தின் முன்பு குடியமர்வோம். எனவே கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

கலெக்டர் உறுதி
இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Close