அதிரைக்கு விரைவில் ஸ்மார்ட் ரேசன் கார்டு!

தஞ்சாவூர் வட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்துப் பேசியது..

தமிழக அரசால் ஏழை மக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் நியாய விலைக் கடையில் பொருள்கள் துல்லியமாக வழங்கப்படும்.

தமிழக அரசு வழங்கும் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குச் சேர வேண்டும் நோக்கத்தில் வழங்கப்படுகிறது. இந்த அட்டை இல்லாமல் பொது விநியோகக் கடையில் பொருள்கள் பெற முடியாது.

இந்த அட்டையை மற்ற நபர்கள் பயன்படுத்தினால் உரிமைதாரர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் என்னென்ன பொருள் பெற்றுள்ளோம் என்பதை இந்த அட்டை மூலமாக உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளில் துல்லியமான விற்பனையைக் கண்டுபிடிக்க இந்த முறையில் முடியும். நியாய விலைக் கடையில் உள்ள பொருட்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க அட்டையின் பின்னால் உள்ள இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

மின்னணு குடும்ப அட்டை காணாமல் போனால் அருகிலுள்ள இ – சேவை மையத்தில் அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம். இந்த மின்னணு குடும்ப அட்டையை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 1,184 நியாய விலைக்கடைகள் மூலம் 6,18,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதில், முதல் கட்டமாக தஞ்சாவூர் வட்டத்தில் 155 அங்காடிகளில் சுமார் 30,000 மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.

மின்னணு குடும்ப அட்டை வரப்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச் சொல் குறுந்தகவலாக அனுப்பப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அந்த குறுந்தகவலையும், பழைய குடும்ப அட்டையையும் கொண்டு வந்து புதிய மின்னணு குடும்ப அட்டையை அந்தந்த நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்லலாம். இந்த ஒரு முறை கடவுச்சொல் குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 7 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

எனவே குடும்ப அட்டைதாரர்கள் இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுச் செல்லலாம் என்றார் ஆட்சியர்.

Close