அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்…!

அதிரை இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் 06/04/17 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பாக மகளிருக்கான திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, வீட்டுக்காய்கறித்தோட்டம் அமைத்தல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இன் கவுரவத்தலைவர் ஹாஜி.எம்.எஸ்.தாஜுத்தீன், தலைமையேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து இந்த அமைப்பின் தலைவர் விவேகாந்தன், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வரவேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் குப்பைகளை தரம்பிரித்து கையாளுவது, ப்ளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மக்கும் குப்பைகளை வைத்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும், தஞ்சை வேளான் அலுவலர் வை.சுஜாதா விரிவாக விளக்கினார்.

இதில் தண்ணீரின் அவசியம், கோடைகாலத்தில் நீர்பராமரிப்பு, மழை நீர் சேகரிப்பது பற்றி, பட்டுகோட்டை வேளான் அலுவலர் ச.மாலதி சிவகுமார் எடுத்துரைத்தார். அதேபோன்று விஷமில்லாத காய்கறிகளை சாப்பிட வீட்டு காய்கறிதோட்டம் அமைப்பது குறித்து தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை ஆசிரியை மணி பாரதி விளக்கினார்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பைகள் பற்றியும், அவற்றை சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தாமல் அகற்றுவது குறித்தும் சென்னையை சேர்ந்த சுற்றுசூழல் பாதுகாப்பு ஆலோசகர் முஹம்மது பி.ஜெயின் அக்பர் ஓளித்திரை மூலமாக தெளிவான விளக்கத்தை வழங்கினார். இந்த கருத்தரங்கை சுற்றுசூழல் மன்றத்தின் ஒருங்கினைப்பாளர் பேரா.செய்யது அஹமது கபீர் ஒருங்கினைத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காதர் முஹைதீன் கல்லூரி பேராசியர் மௌலானா.இத்ரீஸ் அஹமது, இமாம் ஷாபி பள்ளியின் நிர்வாக இயக்குனர் ரேவதி, பள்ளி முதல்வர் மீனாகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக சுற்றுசூழல் மன்றத்தின் செயலாளர் முஹம்மது சலீம் அவர்கள் நன்றியுரையுடன் நிறைவு செய்தார்.

மிகவும் பயணுள்ள இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

Close