சமூக சேவைக்காக “டாக்டர்.அப்துல் கலாம்” விருது பெற்ற அதிரை இளைஞர் காலித்!

அதிரை சேதுரோடு பகுதியை சேர்ந்தவர் காலித் அஹமது. சென்னை AMS பொறியியல் கல்லூரியில் 3 ஆண்டு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர் அதிரையிலும், சென்னையிலும் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். Crescent Blood Donors அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்து வரும் இவர் இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உடனுக்குடன் சமூக வலைதளங்களின் மூலமாக இரத்தம் கிடைக்க வழிவகை செய்து வருகிறார். அதே போல, ஊரில் விபத்துகள் நடந்தால் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் தனது நண்பர்கள் உதவியுடன் அனுமதித்து உதவி செய்து வருகிறார்.

அது போக சென்னையில் இயங்கி வரும் அறப்போர், D4V உள்ளிட்ட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்ள இவர் தொடர்ந்து சாலை பாதுகாப்பு, இரத்ததான விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து பள்ளிகளிலும் பொதுவெளியிலும் தனது நண்பர்களோட சேர்ந்து பிரச்சாரம் செய்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற காபி வித் எம்.எல்.ஏ நிகழ்விலும், நேற்றைய தினம் சென்னையை அடுத்துள்ள பாண்டேஷ்வரத்தில் நடைபெற்ற உழவே தலை மாநாட்டிலும் இவரது உழைப்பு அளப்பறியது.

கடினமான பொறியியல் படிப்பை படித்துக்கொண்டு இவர் ஆற்றிவரும் சமுதாய சேவைகளை பாராட்டி இவருக்கு Awareness India Movement அமைப்பின் சார்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Close