அதிரை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த கடைகளுக்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அதிரை அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் புதிய மதுக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் நேற்று பட்டுக்கோட்டை–முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பரக்கலக்கோட்டையில்  கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. எனவே பரக்கலக்கோட்டையில் மதுக்கடை திறக்கக்கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக பட்டுக்கோட்டை–முத்துப்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Close