அதிரை பேரூராட்சியின் அரைகுறை வேலை…! காயப்படும் மக்கள்…!

அதிரை 14-வது வார்டு ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி பின்புறமாக உள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் பாதைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்து வந்தன. இதுகுறித்து இந்த பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று சுமார் 9 மாதங்களுக்கு முன்னதாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இருப்பினும் நமது பேரூராட்சியின்  மற்ற பணிகளை போல், இந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணியிலும் அரைகுறை கதியில் வடிகாலை மட்டும் அமைத்து விட்டு அதனை மூடாமல் விட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள  குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் போது அடிக்கடி இந்த மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது. இதே போல் இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்த பாதை வழியாக செல்லும் போது ஒரு வித அச்சத்தோடு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட தெரு மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த மழை நீர் வடிகாலை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் சார்பாகவும் அதிரை பிறையின் சார்பாகவும் கேட்டுகொள்கிறோம்.

Close