மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தேர்வு

அதிராம்பட்டினம், ஒருபக்கம் தென்னை விவசாயத்தாலும், மறுபக்கம் கடற்கரை வணிகத்தாலும் செழிப்படைந்த ஒரு ஊர். இந்த ஊரை சேர்ந்த மக்கள், கல்வி, வியாபாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், ஊடகம்,  விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில், அதிரையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, தடகளம் போன்ற பல விளையாட்டுக்களில் அதிரையர்கள் சாதித்து வருகின்றனர்.

இந்த தகவல்கள் பலரும் அறிந்தவைதான். ஆனால் அதிரையில் ஒரு துப்பாக்கி சுடும் வீரர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் மர்ஹூம் M.A.ஷேக் முஹம்மது. இவர்களது, மகன் வஜீர் அலி (வயது 42). துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதலில் அதீத ஆர்வமும் திறமையும் உடைய இவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் வரும் ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெறும் 2017 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இது குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்துள்ள வஜீர் அலி, தனது சிறு வயது முதல் இந்த துப்பாக்கி சுடுதலில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதாகவும், தனது தந்தையே தனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக தெரிவித்தார்.

M.A.ஷேக் முஹம்மது – வஜீர் அலி அவர்களின் தகப்பனார்

 

துப்பாக்கி சுடுதல் என்பது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒன்று என்றும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிரையில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் தேசிய அளவிலான பயிற்சியாளரை கொண்டு வந்து மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிக்க இருப்பதாக தெரிவித்தார். வஜீர் அலி இந்த போட்டியில் வெற்றி பெற்று பெறுமை சேர்ப்பதுடன், ஊரில் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கும் அவரது முயற்சி வெற்றி பெறவும் அதிரை பிறை வாழ்த்துகிறது.

அதிரையில் பலரது திறமைகள் வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து விடுகிறது. அவர்களது திறமையை வெளிக்கொணர்ந்து ஊக்கமளித்தால் அவர்கள் எட்டும் தூரம் ஏராளமாக இருக்கும். இது போன்று வெளியுலகால் அறியப்படாத திறமைசாளிகள்நமதூரில் இருந்தால், இந்த பதிவில் உள்ளதை போல அவர்களது தகவலை நமக்கு மெயில், முகநூல், அல்லது வாட்ஸ் அப் மூலமாக அனுப்பலாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த அதிரை பிறை என்றும் தயாராக இருக்கிறது.

 

Close