அடுத்த ஒன்றரை மாதத்துக்கு நமக்கு மீன் கிடைக்காது…!

 

வங்க கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் விசை படகுகளும், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,600 விசைபடகுகளும் கடலுக்குள் செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர்.

மீன்பிடி தடைகாலத்தால் தமிழகத்தில் மீன்கள் விலை உயரக்கூடும்.

இதுகுறித்து இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.டி. தயாளன் கூறியதாவது:-

தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதலும், ஆந்திராவில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 1-ந்தேதி முதலும் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் 47 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தடைகாலத்தில் விசைபடகுகள் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதி இல்லை என்றாலும், பைபர் படகுகள் மூலம் 2 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்க அனுமதி இருக்கிறது. இதில் சிறிய வகை மீன்கள் மட்டுமே வலையில் கிடைக்கும். எனவே பெரிய வகை மீன்கள் கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இதனால் தமிழகத்தில் மீன்கள் விலை உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

காசிமேடு மீனவர்கள் சங்கர், முகுந்தன், பாலமுருகன் ஆகியோர் கூறும்போது, ‘மீன்பிடி தடைகாலத்தால் சென்னையை சுற்றி உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும். மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது விலைவாசி உயர்வு, குழந்தைகள் கல்வி செலவு போன்றவற்றை கருத்தில் கொண்டு நிவாரண தொகையை உயர்த்தி தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தமிழகத்திலும் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் வேளையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 45 நாட்கள் மட்டுமே தமிழக மீனவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த தடைகாலத்தில் விசைபடகுகளை பழுது பார்த்தல், பெயிண்ட் அடித்தல், மீன்பிடி வலைகள் பின்னுதல், சேதமடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-PuthiyaThalaimurai

Close