அதிரை ஷிபா எதிரில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் தினந்தோறும் வீணாகும் தண்ணீர்!

அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரிய நீர்தேக்க தொட்டியிலிருந்து ஊரில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஊரின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த நீர்தேக்க தொட்டியின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை பராமரிக்கும் பேரூராட்சி ஊழியர்களும் ஒரு பொறுப்புணர்வுடன் இன்றி அலட்சியமாக கையாளுகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி இந்த நீர் தேக்க தொட்டியில் பன்மடங்கு தண்ணீர் வெளியாகி அருகில் உள்ள பாத்திமா நகர் சாலை வழியாக ஒடிக்கொண்டிருக்கின்றது.

இது அதிரை பேரூராட்சிக்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதால், விலை மதிக்க முடியாத செல்வமான இந்த தண்ணீர் அதிரை வீணாகிக்கொண்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் மழையில்லாமல் நீர் நிலைகள் நிரம்பாத காரணத்தினால் பல ஊர்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நடுவீதிகளில் போராடுவதை நாம் தினசரி செய்திகளில் பார்த்து வருகிறோம். ஆனால், நமதூரில் அதுபோன்ற மிகவும் இக்கட்டான நிலை வரவில்லை என்றாலும், சில தெருக்களில் அந்த பிரச்சனை உருவெடுக்க தொடங்கி விட்டது.  எனவே பேரூராட்சி அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தண்ணீர் வீணாகும் காரணத்தை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்.

Close