அதிரை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை  பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைமுன்பு நேற்று பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு ஏரிப்புறக்கடையில் திறக்க அதிகாரிகள் முயற்சித்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று கடைக்குமுன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டிஸ்பி சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ்அப்போது பெண்கள், டாஸ்மாக் கடையை இப்பகுதியில்  அமைக்கக் கூடாது. இவ்விடத்தின் அருகே பெண்கள் குளிப்பதற்கான குளம் உள்ளது. அதோடு ஆதிதிராவிடர் குடியிருப்பும், கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அவ்வழியாக எங்கள் கிராமத்துக்கு செல்லும் வழியில் இதுபோன்று டாஸ்மாக் கடை திறந்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்வார்கள். எனவே இங்கு டாஸ்மாக் அமைக்க கூடாது என்றனர்.

சிலர் அப்பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்தனர். இருதரப்பினரையும் அழைத்து, இது தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று டிஸ்பி சேகர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Close