அதிரை மாணவர்களை குறிவைக்கும் வெளியூர் கல்வி நிறுவனங்கள்!

தற்போது கோடை விடுமுறைகள் விடப்பட்டுள்ளன. ஒரு புறம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு நல்ல பள்ளிக்கு மாற்றி அவர்களை அதிக மதிப்பெண்களை எடுக்க வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கல்வியை வியாபாரமாக்கி வரும் கல்வி நிறுவனங்கள் (சிறைசாலைகள்) அவ்வாறு யோசித்து வரும் பெற்றோர்களை தங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமாக தங்கள் பள்ளியின் பால் ஈர்க்க முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் தான் அதிரையில் தற்போது திரும்பும் திசைகளில் எல்லாம் பள்ளிகளின் விளம்பர பேனர்களை காண முடிகிறது. வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈ.சி.ஆர் சாலை, செக்கடி மேடு, கடைத்தெரு என திரும்பும் திசைகளில் எல்லாம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி என பல ஊர்களை சேர்ந்த பள்ளிகளின் ஆசையை தூண்டும் விளம்பர பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன.

“பத்தாம் வகுப்பில் எங்கள் பள்ளி மாணவர் 497 மதிப்பெண்கள், 12ஆம் வகுப்பில் எங்கள் பள்ளி மாணவர் 1185 மதிப்பெண்கள்… தேர்ச்சி சதவீதம் 100… உங்கள் பிள்ளைகளும் இப்படி மதிப்பெண்களை பெற வேண்டுமா! மருத்துவம் பொறியியல் படிப்புகளில் அவர்கள் சேர வேண்டுமா! எங்கள் பள்ளிக்கு வாருங்கள்…” இப்படி ஆசையை தூண்டும் வரிகள்… அதனை பார்க்கும் ஒரு சாதாரண பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படங்களும் இது போன்று வர வேண்டும், அவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அதுபோன்ற பள்ளிகளில் அட்மிஷன் போட்டு பணம் செலுத்தும் வரை தான் உங்களை போன்ற பெற்றோர்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் மரியாதை. அதன் பின்னர் உங்கள் பிள்ளைகள் அந்த பள்ளியின் ஒரு உற்பத்தி பொருளாக (Product) ஆகவே ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் கருதப்படுவார். அந்த பொருள் தரமான மதிப்பெண்களை எடுத்தால் அதனை வைத்து விளம்பரம் செய்து, வியாபாரம் செய்வார்கள். ஒருவேலை அந்த பொருள் தரமற்றதாக இருக்கும் பட்சத்தில் தூக்கி எரிந்துவிடுவார்கள். 100 சதவீத தேர்ச்சியை பெறுவதற்காக சரியாக படிக்காத மாணவர்கள் தனித்தேர்வர்களாக மாற்றப்படுவார்கள். அவர்களிடம் பெற்றோர்கள் காலில் விழாத முறையாக கெஞ்சினாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது.

அவர்களை பொருத்தவரை உங்கள் பிள்ளைகளை ஒரு வியாபாரப் பொருளாக பார்ப்பார்களே தவிர அவர்களின் எதிர்காலத்தின் மீது பள்ளிக்கு துளிகூட அக்கரை என்பது இல்லை. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஆவரேஜாக படிக்கும் மாணவர்கள் விளையாடவும் அனுமதிக்கப்படுவதில்லை.

என்ன செய்தாலும் நம் பிள்ளைகள், 400, 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெறுகின்றனவே அதற்கு மேல் வேறென்ன வேண்டும் என நினைப்பவரா நீங்கள்..?ஒன்றை சிந்தித்துப்பாருங்கள்…. வருடா வருடம் 10,12 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததாக மாணவர்கள் செய்திகளில் வருகின்றனரே… அவர்களில் யாரேனும் அடுத்தது என்ன சாதித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா…? ஏன், 10-ஆம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த எத்தனை பேர் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தனர் என்பதாவது தெரியுமா?

நமது அதிரை பிறை உட்பட உள்ளூர் தளங்களில் ஆண்டு தோறும் அதிரை அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளின் தற்போதைய நிலையை நாம் அறிந்தோமா..? அவர்களின் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரித்து பாருங்கள்… மதிப்பெண்கள் என்பது ஒன்றுமில்லை என்பார்கள். மதிப்பெண்களை அதிகம் பெற்றுத்தருகிறோம் எனக்கூறிக்கொண்டு வரும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் அனுபவிக்கும் கொடுமைகளை நீங்கள் உணர்ந்ததுண்டா..? சிறகு விரித்து பறந்த பறவைகள், சிறு கூண்டிற்குள் அடைந்ததை போன்று ஆகிவிடும் நம் பிள்ளைகளின் நிலை. நம் பிள்ளைகளின் தனித்திறமைகளை மறக்கடித்து மதிப்பெண்களில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகின்றனர்.

அதுமட்டுமல்ல நமதூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க வைப்பதன் மூலம் பெற்றோர்களாகிய நமது கண்காணிப்பின் கீழ், நாம் சமைக்கும் நல்ல உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான உடல் நிலையையும், அமைதியான மன நிலையையும் நம் பிள்ளைகள் அடைய முடியும். ஆனால் வெளியூர் கல்வி நிறுவனங்களில் அதனை எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி… அதிரையின் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் எந்த தொழுகைக்கும் இடையூறுகள் ஏற்படுவதில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடும் பள்ளிகளில் பயிலும் நமதூரின் பல மாணவர்கள் ஜும்ஆ தொழுகைக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த கட்டுரையின் நோக்கம் மதிப்பெண்கள் முக்கியமில்லை என்று சொல்வதற்காக அல்ல… மதிப்பெண்கள் மட்டும் தான் முக்கியம் என்று கருதி பள்ளிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் சிறைச்சாலைகளுக்கு உங்கள் அன்பு பிள்ளைகளை பணம் கட்டி அனுப்பி வைக்காதீர்கள் என்று சொல்வதற்காகவே.

உங்களின் பிள்ளைகளுக்கு மதிப்பை பெற்றுத்தருபவை மதிப்பெண்கள் அல்ல, அவர்களின் திறமைகள்..!

மதிப்பெண்கள் தற்காலிகம்! திறமை ஒன்றே நிரந்தரம்!

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close