ரமலானை முன்னிட்டு பள்ளிகள், அலுவலகங்களுக்கான பணி நேரங்கள் அறிவிப்பு!

இன்னும் சில தினங்களில் புனிதமிகு ரமலான் மாதம் துவங்குவதையொட்டி அமீரக அரசு அலுவலகங்களுக்கான பணி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை தினமும் 5 மணிநேரங்கள் மட்டுமே இயங்கும். தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.

அதேபோல் பள்ளிக்கூடங்களும் எதிர்வரும் மே 28 ஞாயிறு முதல் இந்த வருட கல்வியாண்டு நிறைவுறும் ஜூன் 22 வரை தினமும் 5 மணிநேரங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உத்தரவுடன் பல்வேறு வழிகாட்டுதல்களை அமீரக கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் பள்ளிக்கூடங்கள் காலை 8 மணிக்கு துவங்க வேண்டும். மாணவிகள் மற்றும் குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் 9 மணிக்குத் தான் துவங்க வேண்டும்.

அனைத்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சார் செயல்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. உடற்சோர்வு மற்றும் நீர்ப்போக்குகளை தவிர்க்கும் வண்ணம் மாணவ, மாணவிகள் வெயிலில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

அசெம்பிளி / பிரேயர் எனப்படும் தினசரி ஒன்றுகூடலும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தினசரி முதல் வகுப்பின் முதல் 5 நிமிடம் தேசிய கீதம் பாடுவதற்காக ஒதுக்கப்படுகிறது. இடைவேளை நேரம் 10 நிமிடமாகவும், ஒவ்வொரு வகுப்புக்களும் 40 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Close