அதிரை மீனவர்களை அச்சுறுத்தும் சொறி மீன்கள்!

அதிரையில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடலில் தற்போது அதிகளவில் சொறி மீன்கள் மீனவர்கள் வலையில் அகப்பட்டு வருகிறது. இவற்றை யாரும் சாப்பிட மாட்டார்கள். வலையில் இருந்து இவற்றை அகற்றுவதும் சிரமம். வழவழப்பான தன்மை கொண்ட இந்த மீன்கள், தன்னிடம் உள்ள உணர்கொம்புகளால் மீனவர்களை தாக்கும். சொறிமீன் உடம்பில் பட்டவுடன் கடும் அரிப்பு, எரிச்சல், தடிப்புகள் ஏற்படும். இதனால் சொறி மீன்களை அகற்றாமல் வலைகளை இரு தினங்கள் அப்படியே போட்டு விடுகின்றனர்.
பின்னர் வலைகளை உதறி எடுத்து மீண்டும் கடலுக்கு எடுத்து செல்கின்றனர். சொறி மீன்கள் அதிகம் அகப்படுவதால் மீனவர்கள் பலர் கடலுக்கு செல்லவில்லை. ‘ஆழ்கடல் பகுதியில் தான் இந்த வகை மீன்கள் காணப்படும். இரு தினங்களாக தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சொறி மீன்கள் கூட்டம் கூட்டமாக மீனவர்களின் வலையில் அகப்படுகின்றன. பாராசூட் போன்ற வடிவமைப்பு உள்ள இந்த மீன் வரத்து அதிகரித்துள்ளதால், மற்ற மீன்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது’ என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

நன்றி: தமிழ் முரசு

Close