கத்தார் தனிமைபடுத்தப்பட்டதன் பின்னனியில் இஸ்ரேலா…?

தோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த இஸ்ரேல் ஆதரவு அமைப்பு, சில அரபு நாடுகளுடன் கை கோர்த்த தகவல் வெளியாகியிருந்தது.

கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகள், கத்தாருடனான ராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன. போக்குவரத்தையும் அவை துண்டித்துள்ளன.

முன்னதாக அல்ஜசீரா உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியான ஒரு இமெயில் தகவல் தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் அல் ஒடாய்பா, இமெயில் இன்பாக்சில் இருந்து கசிந்த விவரங்களை குளோபல் லீக்ஸ் என்ற ஹேக்கர் குழு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த இமெயில் தகவலில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இஸ்ரேல் நாட்டுடன் நெருக்கமான தொடர்பை கைகொண்டு வருவதாக கூறப்பட்ட தகவல்கள் இருந்தன.

இஸ்ரேல் ஆதரவு அமைப்பான ஜனநாயகத்தின் பாதுகாப்பு என்ற அமைப்புக்கும் அல் ஒடாய்பாவுக்கும் நடுவே நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதை ஹேக்கர் குழு வெளியிட்டது. இந்த அமைப்புக்கு இஸ்ரேல் ஆதரவு பெரும் பணக்காரரான ஷெல்டன் அடேல்சன் என்பவர் நிதி உதவி செய்து வருகிறாராம்.

இமெயில் தகவல்படி, கத்தாரை தீவிரவாத முத்திரை குத்தி ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற திட்டம் வெகுகாலமாக தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. இதற்கு சில பத்திரிகையாளர்களும் உடந்தை என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Close