அதிரையில் 200 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல காணப்பட்ட கடல், மாலை 3 மணி அளவில் திடீரென உள்வாங்கியது. ஏரிப்புறக்கரையில் இருந்து கரையூர் தெரு வரை சுமார் 3 கி.மீ. நீளம் உள்ள கடல் பகுதி, 200 அடி நீளத்திற்கு உள்வாங்கியது. இதனால் மாலையில் கரை திரும்பிய மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு படகுகளை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் மீண்டும் கடல் வழக்கமான நிலைக்கு வந்தது. அத்துடன் பயங்கர சூறைக்காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
அதிராம்பட்டினம் மீனவர்கள் கூறும்போது, ‘சுனாமிக்கு பிறகு இப்போது 3வது முறையாக கடல் உள்வாங்கி இருக்கிறது. இன்று அதிகாலை 2 மணிக்கு கடல் வழக்கமான நிலைக்கு வந்து விட்டதுடன் கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது. இதனால் கடலுக்கு செல்லவே அச்சமாக உள்ளது’ என்றனர்.

-தமிழ் முரசு

Close