பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

Want create site? Find Free WordPress Themes and plugins.
வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண்
பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது
நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி
செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற
இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ
விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும்
புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.


ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு
காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில,
அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச்
சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ்,
மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது 
எப்படி?  

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer
Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க
வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.  


விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி
மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக்
கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும்
செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.


எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப்
பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம்
செலுத்திய ரசீது
.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால்
உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க
முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.


அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து
வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால்
விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று
வழங்குவார்.


பின்னர் காவல்துறை அளித்த சான்று,
வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல்
கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள
காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.


அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு
எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில்
உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.


பின்னர் காவல் நிலையத்தில்
புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித்
தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப
வேண்டும்.


இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.


மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.   


கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.


விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி
முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம்
ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக  தேர்வுக் கட்டுப்பாட்டு
அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.


இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான
கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக்
கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.


விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.


தனித்தேர்வர்களுக்கு:
தனித்தேர்வர்கள் நேரடியாக  தேர்வுத்துறை
இயக்குநர்  அலுவலகத்திற்கு  விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.  பட்டம் மற்றும்
அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக
வேண்டும்.


குறிப்பு:
பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள்,
பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித்
தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும்,
கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author