பிளஸ் டூ தேர்வு நேரம் – மாணவர்களை தயார்படுத்துவது எப்படி? பெற்றோர்களின் கவனத்திற்கு தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும்
பிரச்சினை குறித்து பெற்றோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இதற்கு
விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய செகண்டரி கல்வி போர்டு நிபுணர்கள்
அளித்துள்ள விளக்கங்கள் …..

தேர்வு நெருங்கும் நேரத்தில் பெற்றோர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?

 • மாணவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வது நல்லது.
 • தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல்,
  படம் வரைதல் போன்று மாணவர்களின் பொழுது போக்கு நடவடிக்கைகளை முழுவதுமாக
  கட்டுப்படுத்த வேண்டாம்.
 • குறை சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும்.
 • அன்புடன் அவர்களது கடமைகளை நினைவுபடுத்துங்கள்.
 • சரியான நேரத்தில் தூங்குவதையும் உடற்பயிற்சி செய்வதையும் ஊக்கப்படுத்தவும்.
 • இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்தவும்.
 • மாணவர்களின் பலத்தை எடுத்துக்காட்டுங்கள்.
 • கடந்த காலத்தில் தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட்டு முன்னேறிச் செல்ல ஊக்கம் கொடுக்கவும்.
 • மற்ற மாணவர்களுடனும் அவர்களது  சாதனைகளுடனும் உங்களது குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்தவும்.
 • தேர்வு நேரத்தில் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்துகொள்வது இயற்கையானதுதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
 • தேர்வுக்கு முந்தைய நாட்களில் மாணவர்கள், தாங்கள் படித்தது மறந்து போய் விட்டது என்றால் அதற்காகப் பதற்றப்பட வேண்டாம்.
 • மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், படித்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.
 • உன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யவும்.
 • பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர்களிடம் விளக்கம் பெறச் சொல்லுங்கள்.
 • தேர்வு குறித்த பயங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் பேசினால் நம்பிக்கை வரும்.
 • தேர்வு நேரங்களில் ஒரு நாளில் 15-லிருந்து 30 நிமிடங்கள் வரை அவர்களுடன் செலவிட்டு ஜாலியாகப் பேசி உற்சாகப்படுத்துங்கள்.

 

தேர்வுக்கு எப்படித் தயாராகி
இருக்கிறாய் என்று எப்போது கேட்டாலும் எனது மகன் கோபப்படுகிறான். இப்படிக்
கேட்பதை நிறுத்தி விட வேண்டுமா?
 • ஒவ்வொரு முறையும் தேர்வுக்குத் தயாராகி
  விட்டாயா என்று கேட்கும்போது, மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி கவலை
  உணர்வு அதிகரிக்கலாம். தங்களது குழந்தைகள் எப்படி தேர்வுக்குத் தயாராகி
  இருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் என்ற முறையில் அறிந்து கொள்வதில்
  பதற்றம் இருக்கலாம். அந்தக் கேள்வியை, உங்களது குழந்தையிடம் கேட்பதன் மூலம்
  உங்கள் பதற்றத்தை உங்கள் குழந்தைக்கு மாற்றிவிடுகிறீர்கள் என்பதைப்
  புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தினந்தோறும் 15 நிமிடங்கள் மூச்சுப்
  பயிற்சி அல்லது தியானம் செய்வதற்கு நீங்கள் உதவலாம். தங்களால் முடியும்
  என்று மாணவர்களைச் சொல்லிக் கொள்ளச் செய்வேதே மன அழுத்தத்திலிருந்து
  அவர்களை விடுபடச் செய்யும். எப்படி தேர்வுக்குத் தயாராகி இருக்கிறார்கள்
  என்பதை பெற்றோர்கள் தோண்டித் துருவிப் பார்த்துக் கொண்டிருக்க
  வேண்டியதில்லை.
தேர்வுக்கு நன்றாகத் தயாராகி இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள படித்திருப்பதை எழுதிக் காட்டு என்று குழந்தைகளிடம் கேட்கலாமா?
 • படித்ததை எழுதிக் காட்டு என்று நீங்கள்
  கேட்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கும் கவலைக்கும்
  ஆளாகக் கூடும். அத்துடன் தங்களை எதிர்மறையாக மதிப்பிடத் தொடங்குவதற்கான
  சாத்தியங்களும் உண்டு. அதேசமயம், முக்கியமான பாடங்களை எழுதிப்
  பார்க்கும்படி எப்போதாவது கூறலாம்.
தனது நண்பனுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனது மகன் விரும்புகிறான். அது அவனுக்கு உதவியாக இருக்குமா அல்லது அது நேர விரயமா?
 • ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக
  இருப்பார்கள். குழுவாகச் சேர்ந்து நன்றாகப் படிக்க முடியும் என்று உங்களது
  மகனோ, மகளோ விரும்பினால், அதற்கு அனுமதிக்கலாம். அப்போது தங்களது
  சந்தேகங்களை சக நண்பர்களிடம் கேட்டு அவர்கள் தெளிவுபடுத்திக்கொள்ள
  முடியும். அத்துடன், அவர்கள் படிக்கவும் ஊக்கமாக இருக்கும். தனித்துப்
  படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, குழுவாகப் படிக்கும்போதும் நன்றாகப்
  படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதை குழந்தைகளிடம் சொல்வது அவர்கள் இலக்கை எட்டுவதற்கு ஊக்கமளிக்குமா?
 • தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற
  வேண்டும் என்று சொல்வதற்கு முன்னால், உங்கள் குழந்தைகளிடம் பேசி எவ்வளவு
  மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதைக் கேட்டு இலக்கை நிர்ணயிக்கலாம்.
  உங்களது இலக்கு அவர்களுக்கு வழிகாட்டுவதுபோல இருக்க வேண்டும்.
  மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.
எனது குழந்தை தொலைக்காட்சி
பார்ப்பதிலேயே நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. தொலைபேசி மூலம்
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவனிடம் கோபிக்காமல் எப்படி இதை
நிறுத்துவது?
 • உங்கள் குழந்தை படிப்பதற்கான கால
  அட்டவணையை உருவாக்குவதில் உதவுங்கள். அதன்மூலம் படிக்கின்ற நேரத்தில்
  தொலைக்காட்சியைப் பார்த்து நேரம் வீணாவது குறித்து அவர்களை உணரச்
  செய்யுங்கள். அதேசமயம், சிறிது நேரம் தொலைக்காட்சி பார்ப்பதோ அல்லது சிறிது
  நேரம் நண்பர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவதோ பிரச்சினை இல்லை. படிப்புக்கு
  இடையில் சின்ன ‘பிரேக்’ எடுத்துக்கொள்ள அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
படிப்பதிலும் படித்ததை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எனது குழந்தை கஷ்டப்படுகிறான். படிப்பை மேம்படுத்த நான் எப்படி உதவ முடியும்?
 • முதலில் மதிப்பெண்கள் பெறுவது குறித்து
  கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேர்வுக்குத் தயாராவதில் கவனம் செலுத்தச்
  சொல்லுங்கள். பாடங்களையும் அதில் உள்ள கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு
  படிப்பதில் அவர்களுக்கு உதவுங்கள். பாடங்களைத் திருப்பிப் படிக்கும்போது
  சில கேள்விகளுக்கு விடை எழுதிப் பார்க்கச் சொல்லி அவர்களை
  ஊக்கப்படுத்துங்கள்.
தேர்வையொட்டி இரவு நேரத்தில் முழித்துப் படிக்கும்போது காபி கொடுப்பதை நிறுத்தி விடலாமா?
 • படிக்கும்போது கொஞ்சம் காபி குடிப்பது
  முழித்துப் படிக்க உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஓரிரு தடவை காபி
  என்றால் பரவாயில்லை. அதிகப்படியாகக் காபி குடிப்பதால் சிலருக்கு நடுக்கம்
  ஏற்படலாம். அசிடிட்டி ஏற்பட்டு வயிற்று வலி வரலாம். எனவே, அளவோடு காபி
  கொடுப்பது நல்லது.
தேர்வுக்குத் தயாராகி வரும் இந்த நேரத்தில் விருந்துக்கு அழைத்துச் செல்லலாமா? அது நேரத்தை வீணடிப்பதாக இருக்காதா?
 • இல்லை. தேர்வுக்குப் படித்துக்
  கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் படிப்புக்கு இடையே சிறிய இடைவெளி
  தேவைப்படுகிறது. விருந்துக்குச் செல்லும் நேரத்தை மகிழ்ச்சியாகக்
  களிப்பதால், அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன்
  படிப்பதில் கவனம் செலுத்துவர்கள் .
எனது மகன் பாட்டுக் கேட்டுக்கொண்டே படிப்பதை நிறுத்தி விட வேண்டுமா?
 • இசையைக் கேட்டுக்கொண்டே கவனமுடன் படிக்க
  முடிகிறதா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இசையைக்
  கேட்டுக்கும்போது கவனம் அதிகரிப்பதாக சில மாணவர்கள் உணரலாம். அதில் ஒரு
  குழந்தை உங்கள் குழந்தையாக இருக்கலாம். எனவே, இசையைக் கேட்டுக்கொண்டு
  படிப்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். கவனமுடன் படிக்கிறார்களா என்பதுதான்
  முக்கியம்.
நண்பர்களுடன் சிறிது நேரத்தைச் செலவிடுவது நேரத்தை வீணாக்குவதாக நான் நினைக்கிறேன். இது சரியா? தவறா?
 • நண்பர்களுடன் சிறிது நேரம் பேசுவது,
  தேர்வுக்குத் தயாராவதற்கு உதவக்கூடும். அது மாணவர்களை புத்துணர்வு பெறச்
  செய்யும். எனவே, அந்த நேரம் வீண் என்று கருத முடியாது. நீண்ட நேரம்
  படிக்கும்போது, படிப்பதற்கு சிறிது நேரம் இடைவெளி விட வேண்டியது அவசியம்.
  சில மாணவர்கள்  சிறிது நேரம் படிப்பை விட்டு விட்டு ஓய்வு எடுத்துக்
  கொள்கிறார்கள். சிலர் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். சிலர் நடைப்பயிற்சி
  மேற்கொள்கிறார்கள். சிலர் இசை கேட்கிறார்கள். இதுபோன்று படிப்புக்கு 
  சிறிது இடைவெளி விடுவதன் மூலம் படிப்பதற்கு ஏற்ற மனோநிலையும் உடல் திறனும்
  மேம்படும்.
எனது குழந்தை மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
 • மனநிலையில் அடிக்கடி மாற்றம் தெரியும்.
  சோகமாக இருக்கலாம். நண்பர்களைச் சந்திப்பதையும் மற்றவர்களுடன் வெளியில் 
  செல்வதையும் தவிர்ப்பார்கள். சாப்பாடு குறையும்.  தூக்கம் சரிவர இருக்காது.
  எரிச்சலும் கோபமும் இருக்கும். இதுகுறித்து அவர்களிடம் பேசி  சகஜ
  சூழ்நிலையை ஏற்படுத்தலாம். குழந்தைகள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை
  வெளிப்படுத்தாமல் இருக்கலாம். குழந்தைகளின் பேச்சிலிருந்தும் அவர்களது
  அன்றாட நடத்தைகளிலிருந்தும்  அவர்களது மன அழுத்தத்தை பெற்றோர்கள் கண்டறிய
  வேண்டியது அவசியம். ஆலோசகர்களிடம் அழைத்துச் சென்று அவர்களது ஆலோசனையைப்
  பெற தயங்கக் கூடாது.
எனது குழந்தை தினந்தோறும் இரண்டு மூன்று மணி நேரம்தான் தூங்கிறாள். இது அவளது உடல் நிலையையும் தேர்வுக்குத் தயாராவதையும் பாதிக்குமா?

 • தினமும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே
  தூங்குவது உடல்நிலையைப் பாதிக்கும். அத்துடன் தேர்வுத் தயாரிப்புக்கும்
  நல்லதல்ல. மிகக் குறைவான நேரம் தூங்குவதை நமது உடல் ஒன்றிரண்டு நாட்களுக்கு
  ஏற்றுக் கொள்ளும். ஆனால், இதைத் தொடர்ந்தால், சோர்வாகவும், தூங்க வேண்டும்
  போலவும் இருக்கும். அத்துடன் தலைவலியும், உடல் வலியும் இருக்கும்.
  செரிமானம் இருக்காது. இதனால் எரிச்சலும் முன்கோபமும் படிப்பில் கவனம்
  செலுத்த முடியாத நிலையும் ஏற்படலாம். எனவே, தேர்வு நேரத்திலும் தகுந்த
  தூக்கம் அவசியம் தேவை.
 • குறிப்பு :
             அதிரை பிறையில் பிளஸ் டூ மாணவர்களுக்காக பொது தேர்வில் எப்படி மாணவர்கள் படிப்பது , தேர்வு நேரங்களில்  தன் பிள்ளைகள் மீது  பெற்றோர்களின்  கவனங்கள் போன்ற பதிவுகள் பதிய படிக்கிறது. இன்னும் பொது தேர்வு எழுதும் மாணவர்ககளுக்காக பல விஷயங்கள் பதிய இருக்கிறோம் .  காரணம்  இன்ஷா அல்லாஹ் வருங்காலத்தில் IAS , IPS , மட்டும் பல துறைகளில் நமதூர் மாணவர்கள் வர வேண்டும் என்ற ஒரு ஆசைதான் .  இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் வெற்றி அடைய துவா செய்வோம் . 
 •  அதிரை பிறையில் கல்வி மட்டும் வேலை வாய்ப்பு சம்மந்தமான விஷயங்கள் விரைவில் பதிய இருக்கிறோம் .
Close