மாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை

Want create site? Find Free WordPress Themes and plugins.

வீட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் குழந்தைகளின் குண நலன்களில் பெரிய வித்தியாசங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து, தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாடுடன் வாழும் நிலை மாறுகிறது.
குழந்தைகள், தங்கள் பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக   இருந்தாலும் மற்ற குழந்தைகளைப் போன்று உடைகள், ஆடம்பரப் பொருட்கள், தொழிநுட்ப வசதிகள், பொழுதுபோக்கு போன்றவற்றை தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற என்ணம் அதிகரித்து வருகிறது. “இரண்டு உடையை மட்டும் வைத்துக்கொண்டு கல்லுரிக்காலத்தை முடித்தேன், ஒரே சீருடையை மட்டும் வைத்துக்கொண்டு  பள்ளிக்கு செல்வேன்” என்பது கடந்த தலைமுறையினர் தங்களுடைய கல்விக் காலத்தைக் குறித்து கூறுவது. ஆனால் தற்போதைய தலைமுறை அப்படிப்பட்டதாக இல்லை.
பள்ளியில் படிக்கும்பொழுதே விலையுயர்ந்த அலைபேசி, இரு சக்கர வாகனம், புதிய புதிய உடைகள், விளையாட்டு உபகரணங்கள், வெளியில் திரைப்படங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்வதற்கு பணம் பெறுதல் என குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். பெற்றோரும் குழந்தை ஆசைப்படுகிறதே என ஆரம்ப காலங்களில் கொடுத்து பழகும் நிலை, பின்னர் அவர்களின் குழந்தை பணிக்கு செல்லும் வரை தொடரும் ஒரு தொடர்கதையாகிவிடுகிறது.
மழலைப் பருவத்திலிருந்து பழக ஆரம்பிக்கும் பழக்கம், மற்ற குழந்தைகளின் தாக்கம், தொலைக்காட்சி அலைவரிசைகளின் விளம்பரங்கள், தாழ்வு மனப்பான்மை போன்றவை ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆசைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தைக்கு புரிய வைப்பதும், ஒரு இளைஞனுக்கு  புரிய வைப்பதிலும் வித்தியாசங்கள் அதிகம் இருக்கிறது. மெட்ரிக் பள்ளிகளில் பள்ளி விழா, விளையாட்டு விழா போன்றவற்றுக்கு புதிய உடைகள் வாங்க கட்டாயப்படுத்துவதும், பள்ளிக் கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் தாமதம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு அழைப்பு விடுப்பதும் கூட மாணவர்கள் மனதில் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகள் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை தவிர்த்து, சமத்துவத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஆனால் கல்வியும், கல்வி நிலையமும் மாணவர்களின் நடைமுறைகளில் வேறுபாட்டை உருவாக்குவதில் முக்கிய இடத்தில் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரியது. பாடத்தை தவிர சமூக, சுற்றுப்புற, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில் போதிய அக்கறை  காட்டுவதில்லை என்பதும் கல்வியாளர்கள் பள்ளி, கல்லூரிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.
தேவையில்லாத பொருளாதார இழப்புகளை தவிர்ப்பதும், குழந்தைகள் மனதில் ஏற்படும் பாகுபாடுகளை களைந்து அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக கொண்டு செல்வதற்கான செயல்களை செய்ய வேண்டிய கடமை பெற்றோருக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளது. கூறும் அறிவுரைகள் நமக்கு நன்மை தருபவை என்பதை மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றங்கள் நிகழும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author