50 அமர்நாத் யாத்திரிகர்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் சலீம் ஷேக்!

அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியான நிலையில், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கத் தொடங்கியதும் டிரைவர் பேருந்தை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றதால் 50 பயணிகளின் உயிர் காப்பற்றப்பட்டுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பேருந்தை ஓட்டிய குஜராத்தைச் சேர்ந்த சலீம் ஷேக், சம்பவம் குறித்து கூறுகையில், ”இரவு 8.20 மணிக்குப் பேருந்தின் மீது குண்டுகள் பாயத் தொடங்கின. அந்த சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சக்தியைக் இறைவன் எனக்கு அளித்தான். பாதுகாப்பான இடம் வரும் வரையில் பேருந்தை நான் நிறுத்தவே இல்லை” என்றார்.

சலீமின் செயலை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பாராட்டியுள்ளார். சலீமுக்கு வீரதீரச் செயலுக்கான விருது வழங்க பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் உடல்கள் குஜராத்துக்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

Close