புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை

 சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ.1000 கோடி செலவில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதை அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். 

அங்கு ஓராண்டு சட்டப்பேரவை கூட்டமும் நடைபெற்றது.இந்நிலையில், 2011ம் ஆண்டில் அதிமுக அரசு பொறுப்பேற்றது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.

 புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றி, ரூ.143.14 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று மதியம் திறந்து வைத்தார். புதிய மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திரிகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, கை மற்றும் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு உயர் சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 

இந்த மருத்துவமனையுடன், தமிழகம் முழுவதும் ரூ.258 கோடி செலவில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்தி வழங்கும் திட்டத்தையும் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்படி, அம்மா உணவகங்களில் ரூ.3க்கு பருப்பு மசாலாவுடன் 2 சப்பாத்திகள் விற்கப்படவுள்ளன. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.546.93 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களையும் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை ஓமந்துரார் தோட்டத்தில் இருந்து அதிரை பிறை செய்தியாளர்…

Close