தஞ்சை மாநகராட்சி முதல் மேயர் இன்று பதவி ஏற்றார்…

தஞ்சை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் மேயர் திருக்குறள் வாசித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட கலெக்டர் என். சுப்பையன் தஞ்சை மேயர் சாவித்திரி கோபாலுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அங்கி மற்றும் செங்கோல் ஆகியவற்றை வழங்கினார்.
இதையடுத்து மேயராக பதவி ஏற்ற சாவித்திரி கோபால் பேசியதாவது:–
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும், கலைகளுக்கும், கலாச்சாரத்திற்கும், இலக்கியத்திற்கும் பெருமை வாய்ந்த சரித்திர புகழ் மிக்க மாவட்ட தலைநகராக விளங்கும் தஞ்சையில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 1866 – ல் தோற்று விக்கப்பட்டு தஞ்சை நகராட்சியானது, மறைந்த அண்ணா தமிழக முதல்வராக இருந்த போது 1967–ல் நூற்றாண்டு விழா கண்டது.
அதனை தொடர்ந்து எம்.ஜி-.ஆர். தமிழக முதல்வராக இருந்த போது 1983–ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா கடந்த 10.4.2013 அன்று சட்ட மன்ற கூட்டத் தொடரில் விதி எண் 110– ன் கீழ் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார்.
அதன் பின்னர் கடந்த 30.10.2013 அன்று சட்டப் பேரவையில் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தஞ்சைக்கு மேன் மேலும் புகழ் சேர்க்கும் வகையில் கடந்த 19.2.2014 அன்று தஞ்சை மாநகராட்சியானது. தமிழகத்தின் 11–வது மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதற்கான அரசு ஆணையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பொற் கரங்களால் வெளியிட்டு உள்ளார். 
எனவே, தஞ்சை நகருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளை தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையிலும் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும், தஞ்சை வாழ் மக்களும் பெருமிதம் கொள்ளும் வகையிலும் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணையிட்டு மங்கள கரமாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தஞ்சை மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக் கண்ணு, மாநில விவசாய பிரிவு தலைவர் துரை.கோவிந்தராஜன், மாநகராட்சி ஆணையர் குமார் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
Close