மயிலாடுதுரை மக்கள் மனதில் இன்றும் வாழும் முன்னாள் MLA அதிரை MMS அபுல்ஹசன்!

MMS அபுல் ஹசன். காங்கிரஸ் மற்றும் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தார். அதிராம்பட்டினத்து மண்ணின் மைந்தரான இவர் 1991 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு 55.34 சதவிகித வாக்குகளை பெற்று வென்றார். அதை தொடர்ந்து மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்த அபுல் ஹசன் 1996 சட்டமன்ற தேர்தலிலும் 58.50 சதவீத வாக்குகளை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

இதுவரை மயிலாடுதுறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக விழுக்காடு வாக்குகளை பெற்றவர் இவர் ஆவார். இவருக்கு பின்னர் எந்த வேட்பாளாராலும் இவரது வாக்கு சதவிகிதத்தை விட அதிகம் பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அபுல் ஹசன் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தது. காரணம், அப்பழுக்கற்ற மக்கள் பணிக்கு அவர் சொந்தக்காரராக திகழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற ஆணவம் இன்றி அனைத்து தரப்பு மக்களுடனும் எளிமையாக பழகினார்.

பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், இந்து, கிருஸ்தவ மத சகோதரர்களிடமும் அதிகளவில் நட்பு பாராட்டி அவர்களின் தேவைகளை தனது தேவை போல நிறைவேற்றிக்கொடுத்தார்.

இதுவரை 11 முறை மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமுக வை சேர்ந்த கிட்டப்பாவுக்கு அடுத்தபடியாக 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் MMS அபுல்ஹசன். அதிரையில் முளைத்த அபுல்ஹசன் என்ற மரம், மயிலாடுதுறை வரை படர்ந்து அந்த மக்களுக்கு நிழல் கொடுத்துள்ளது.

வியாபாரத்திற்காக மயிலாடுதுறை சென்றவர் பணம் மட்டுமின்றி மக்களின் மனங்களை சம்பாதித்து வியாபரத்திலும் அரசியலிலும் வெற்றி பெற்ற MMS அபுல்ஹசன் அவர்கள் ஆட்சிகாலத்தில் செய்துகொடுத்த  நலத்திட்ட பணிகள் இன்றளவும் மக்களுக்கு பயணளித்துக்கொண்டு இருக்கின்றன. எனவே தான் மயிலாடுதுறை மக்கள் MMS.அபுல்ஹசன் அவர்களை இன்றளவும் நினைத்து புகழ்கின்றனர்.

ஒருவர் இறந்த பின்பும் அவர் மக்கள் மனதில் இறக்காமல் வாழ்வதற்கு அவர் செய்த நற்காரியங்கள் துணை புரிகின்றன என்பதற்கு MMS.அபுல்ஹசன் ஒரு நல்ல சான்று…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close