நம்மை விட்டு பிரிகிறது மைக்ரோசாப்ட் பெயின்ட்! #MsPaint

நம்மில் பெரும்பாலானவர்கள், கணிப்பொறியில் முதன் முதலில் செய்தது ‘மைக்ரோசாப்ட் பெயிண்ட்’டில்நம் பெயரை வரைந்து பார்த்ததாகத்தான் இருக்கும். 90 களில் கணினிகள் மெல்லப் பரவத் தொடங்கிய பொழுது, பள்ளியிலோ, கணிப்பொறி வகுப்பிலோ சந்தித்தகணினிகள் ‘சிங்காரவேலன்’ படத்தில் காட்டப்படுவது போல் கவர்ச்சிகரமாக இருக்கும் என எண்ணி அணுகியவர்களை மிரட்டியது’டாஸ்’ (MS-DOS) இயங்குதளம். ஒன்றையும் மூன்றையும் கூட்ட நான்கு வரிகளைத் தட்டச்சு செய்யவேண்டியிருப்பதைப் பார்த்து மிகுந்தஏமாற்றம் கண்டிருந்தவர்களைத் தன் கரம் கொடுத்து அரவணைத்தது விண்டோஸ் இயங்குதளத்தின்’மைக்ரோசாப்ட் பெயிண்ட்’தான். பிற்காலத்தில், நம் கைகளுக்குளேயே நிகழப்போகும்கணினியின் சாத்தியங்களுக்கு முன்னோட்டமாக இருந்தது ‘பெயிண்ட்’. வட்டங்களும், சதுரங்களும் போட்டு, வண்ணங்களை அள்ளித் தெளித்து, நினைத்த நேரத்தில் அழிக்கவும் முடியுமென்பது மிகுந்த சுவாரசியமாக இருந்தது. நம்மைகணினிக்கு நெருக்கமாக்கியது.

 

இன்று, ஓவியங்களைவரைவதற்கும் புகைப்படங்களை மாற்றித் தொகுக்கவும் எக்கச்சக்கமான மென்பொருள்களும், ‘ஆப்’களும் வந்துவிட்டன. நாம் வெளிநாட்டில் பிறந்தால் எப்படியிருப்போம், வயதானால் எப்படியிருப்போம், பெண்ணாகப் பிறந்திருந்தால் எப்படியிருப்போம் என்றெல்லாம் அவை காட்டுகின்றன. ஆனாலும், முதலில் பழகிய சைக்கிள் போல, முதன் முதலில் விளையாடிய பந்தைப் போல, பலருக்கும்மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது பெயிண்ட். சிறிய வேலைகளுக்கு இன்றும்அதைப் பயன்படுத்துபவர்கள் உலகமெங்கும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட’மைக்ரோசாப்ட் பெயிண்ட்’ விரைவில் வரவிருக்கும் புதிய ‘விண்டோஸ் 10′ இல் இருக்காது என்று ஜூலை 24 அன்று’மைக்ரோசாப்ட்’ நிறுவனம் அறிவித்தது. அறிவித்ததில் இருந்து, சமூக ஊடகங்களில் உலகெங்கும் உள்ள ‘பெயிண்ட்’ ரசிகர்கள், வருத்தத்தை ‘மீம்ஸ்’களாக வெளிப்படுத்தினர்.

 

1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட’விண்டோ ஸ் 1.0’ இயங்குதளத்துடனேயே வந்தது ‘பெயிண்ட்’, வெளியாகி முப்பத்தியிரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது செய்யப்பட்டசில மாற்றங்களுடன் தொடர்ந்து வந்தது. பிரபலமாக இருக்கும்பிற புகைப்பட மென்பொருள்களுக்கு ஈடுகொடுக்ககடந்த 2016ஆம் ஆண்டு, ‘பெயிண்ட் 3D’யை அறிமுகப்படுத்தியது ‘மைக்ரோசாப்ட்’. ஆனாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், மிக அடிப்படையான அம்சங்களைக் கொண்ட ‘பெயிண்ட்’ கைவிடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன், அதற்கு சமூக ஊடகங்களில் எழுந்த ஆதரவைப் பார்த்த ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம், ‘பெயிண்ட்’ முழுமையாக நீக்கப்படாது, ‘விண்டோஸ் ஸ்டோரி’ல் தொடர்ந்து கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆயினும் சமூக ஊடகத்தில், தொடர்ந்து மீம்ஸ் போட்டு துக்கம் அனுசரித்து வருகின்றனர் கணினி பயன்பாட்டாளர்கள். இதற்கு முன், 2014ஆம் ஆண்டு, இன்றைய சமூக ஊடகங்களுக்கெல்லாம் முன்னோடியான, ‘ஆர்குட்’ இணையதளம் நிறுத்தப்பட்ட பொழுதும் சோகமாகியது இணைய உலகம். வசந்த் பாலகிருஷ்ணன்

Close