ஓட்டுக்கு பணம் கொடுத்தால் படம் எடுத்து இமெயிலில் தெரியப்படுத்துங்கள்

வாக்களிக்க பணம் கொடுப்பதை நீங்கள் அறிந்தால், படம் எடுத்து தேர்தல் ஆணைய இணையதள முகவரிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:, ‘வாக்களிப்பது நமது உரிமை மற்றும் கடமையாகும். 

பணத்திற்காக உங்கள் வாக்கை விற்கக்கூடாது. 1000 ரூபாய்க்காக 5 வருடம் எதிர்காலத்தை விற்று விடாதீர்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், பின்னர் யார் தான் ஓட்டு போடுவார்கள்?வாக்களிக்க நீங்கள் பணம் வாங்கிவிட்டால் அரசியல்வாதிகளுக்கும், உங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுகிறது, நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கணக்கு கொடுக்க வேண்டும். 

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றம். நாம் பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால் நமது விருப்பப்படி ஓட்டுப்போடலாம். ஒவ்வொரு முறையும் இதை சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் இந்த முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய தகவல் கிடைத்தாலும், அந்த இடத்திற்கு நாங்கள் செல்வதற்குள் அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள். 

ஆனால் இந்த முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.பொதுமக்கள் அனைவரது கையிலும் கேமரா செல்போன் இருக்கிறது. எனவே உங்களிடம் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தாலோ அல்லது உங்கள் முன்னால் யாருக்காவது பணம் கொடுத்தாலோ அதை படம் எடுத்து எங்கள் இணையதள முகவரிக்கும், மின்னஞ்சலுக்கும் தெரியப்படுத்துங்கள் . இதற்கான மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரியை விரைவில் அறிவிக்கிறோம் என்றார்.

-dinamani

Close