உலக கடிகாரத்தை கண்டுபிடித்த செய்யது ஹசன் என்னும் படிக்காத விஞ்ஞானி!

உலகில் உள்ள பல நாடுகளில், சூரியன் மற்றும் பூமியின் சுழற்சியை பொறுத்து அதன் நேரங்கள் மாறுபடுகின்றன. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்தால், பல நாடுகளில் இரவு பொழுதாக இருக்கும். இப்படி இருக்க அனைத்து நாடுகளின் நேரங்களையும் ஒன்றாக காணும் வகையில் புதிய கடிகாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த சையது ஹசன்.
ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் பிளார்ட்ஸ் என்பவர் இது போன்ற கடிகாரத்தை முதன் முதலில் கண்டுபிடித்தாலும் அதில் இருந்த சில தொழில்நுட்ப சிக்கல்களால் அந்த கடிகாரத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார் சையது ஹசன். 7-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் சுமார் 2 வருட உழைப்பிற்கு பிறகு உலக நாடுகள் திரும்பிப்பார்க்கும் வகையில் இதனை கண்டுபிடித்துள்ளார்.
சாதாரண ஓட்டல் ஊழியரான இவர் தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்காக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளார். கிரீன்விச் மின் டைம்  மற்றும் கோ-ஆர்டிநேட்டட்  யூனிவர்சல் நேர முறைபடி இயங்கும் இந்த கடிகாரத்தில், சூரியனின் சுழற்சி முறையில் இரவு, பகல் எந்தெந்த நாடுகளில் உள்ளது என்பதையும், இஸ்லாமிய மக்களின் பிறை நாட்களையும் பார்க்கலாம் என்கிறார் சையது ஹசன் .
இந்த கடிகாரத்தில் இரண்டு திசைக்காட்டிகளுடன், 96 ஜி.எம்.டி எண்களும் , நான்கு நிறங்களிலும் பக்கவாட்டு கோடுகளும் உள்ளன. இதற்கு முறையான அனுமதி பெற அரசு காப்புரிமை அலுவலகத்தில் இதன் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியை கடந்து முயற்சியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல ஒரு உதாரணமாக திகழ்கிறார் சையது ஹசன். இவரின் இந்த படைப்பால் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தமிழனின் பெருமையை உலகம் போற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Close