முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள்..!

முத்துப்பேட்டையில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 25ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலத்த போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அசம்பாவீதங்கள் ஏதும் நடக்காத வகையில், இன்று காலையில் இருந்து பட்டுக்கோட்டை, நாகை, திருத்துறைபூண்டி, வேதாரணியம் , மன்னார்குடி, அதிராம்பட்டினம் என ECR சாலையில் செல்லும் பேருந்துகளும், முத்துப்பேட்டைகுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்களும் வீதிகளில் நடமாடாமல் உள்ளதால் பிரதான சாலை வெறிச்சேடி காணப்படுகிறது.

முத்துப்பேட்டை டவுனில் உள்ள அணைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மாணவர்கள் நலன் கருதி முழு விடுமுறை விட்டுள்ளது. ஊர்வலத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. மேலும் ஊர்வல பாதையை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் போது அதனை படம் பிடிக்க 100க்கும் மேற்ப்பட்ட வீடியோக் கேமராக்கள் பயன்படுத்த உள்ளனர். ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுரங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் மற்றும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பேரிக்காடு அமைத்துள்ளனர். கலவரத்தைத் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.

ஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.வரதராஜ் தலைமையில், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் எஸ்.பி.மயில்வாகனம், மற்றும் தஞ்சை, நாகை. திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் எஸ்.பிக்கள் மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் மேற்பார்வையில் மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயகுமார் மற்றும் நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி பகுதி தாசில்தார்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று முத்துப்பேட்டை ஒட்டியுள்ள பேட்டை தில்லைவிளாகம், தம்பிக்கோட்டை, செம்படவன்காடு, கோவிலூர், ஆலங்காடு, கோபாலசமுத்திரம், இடும்பாவனம் உட்பட சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் கடற்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

Close