சவுதியில் பணிபுரியும் அதிரை ஊழியர்களின் கவனத்திற்கு!!!

நிகாதத் சட்டம் விரிவு: சவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் 8 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி. 

ரியாத்: சவூதி அரேபியாவில் நிகாதத் சட்டத்தை விரிவு படுத்தும் திட்டமாக இனி, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் மட்டுமே அங்கு தங்கலாம் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது.

கடந்தாண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிகாதத் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அங்கு சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை மேலும் குறைத்துவிட்டு, அதிக சம்பளத்துடன் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நிகாதத் சட்டத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தொழிலாளர் அமைச்சகம் பல புதிய விதிமுறைகளை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வரைவு தற்போது அரசின் ஆய்வில் இருக்கிறது. இந்த சட்டத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை சவூதியில் பணியாற்ற முடியும். இந்த கட்டுப்பாடு காரணமாக ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 

ஏனெனில், சவூதி அரேபியாவில் குடியேறிய இந்தியர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                        தகவல்: முஹம்மது இம்தியாஸ் 
Close