டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்… கல்வித்துறை வைத்த செக்..!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்று கிறார்கள்.

அவர்களில் சிலர் அரசு மாத சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்ற போதிலும் தங்களது வீடுகளில் மாணவ – மாணவிகளுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) நடத்தி வருகின்றனர்.

இதற்காக மாணவர்களிடம் மாத கட்டணம் அந்தந்த வகுப்புகள் மற்றும் இடங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க நிலை வகுப்புகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

உயர்நிலை வகுப்புகளுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கணிதம், வேதியியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக 3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.1000 முதல் ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுவரை அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் நடத்தும் தனிப்பயிற்சி மையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாத சம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர்.

இதன் காரணமாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களை எடுத்து வரும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களும் 10-ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் அரசு நிர்ணயித்தபடி பாடங்களை நடத்துவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு பாடம் நடத்த சென்று விடுவதால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும் மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இதுபற்றி பள்ளிக்கல்வி துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுக்க தடை உள்ளது. இதை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் மற்றும் தனியாக பயிற்சி வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Close