அதிரை மக்களை கலங்க வைக்கும் இளைஞர்களின் தொடர் மரணங்கள்

கடந்த சில மாதங்களாகவே இளைஞர்களின் மரணம் அதிகரித்துக் கொண்டே வருகிறது வாழ்ந்து வழிகாட்டவேண்டிய இளைஞர்கள் மடிந்துகொண்டு இருக்கிறார்கள்.

கடந்த 12/09/2017 அன்று 32 வயதான பவுமி அலி என்ர இளைஞர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அந்த சோகம் குறைவதற்குள் 15/09/2017 அன்று வாசன் என்ர 18 வயது பள்ளி மானவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார்

அடுத்த 3 நாட்களுக்குள் 18/09/2017 அன்று மர்ஜுக் அகமது என்ற 18 வயது சிறுவனின் மரணம் பலரை வேதனையொல் ஆழ்த்தியது.

அதன் துயரம் அடங்குவதற்குள் ஹாஜா ஷரீப் என்ற 26 வயது இளைஞர் 19/09/2017 அன்று வஃபாத்தானார்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை கண்டறிந்து களையவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

நானறிந்த காரணங்களினால் சிலவை…

1) இன்றைய உணவுப்பழக்கங்கள், பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள கலப்படங்கள் ஒரு முக்கிய காரணம், எத்தனை எத்தனையோ விழிப்புணர்வு பதிவுகள் நம் கண்முன்னால் வந்தாலும் மிகச்சுலபமாக அதையெல்லாம் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம், உணவே மருந்து, மருந்தே உணவு என்பதையும் மறந்து,
அப்படியொரு அவசர நிலை இன்றைய சந்ததியினர்களுக்கு!

2) தூய்மையற்ற சுற்றுப்புற சூழல்,
இன்றைய நமது வசிப்பிடம் குப்பைகளாலும், சாக்கடை கழிவுகளாலும் சூழப்பட்டுள்ளது அதிலிருந்து உருவாகும் பல உயிர்கொல்லி கிருமிகள், இதில் வேதனை என்னவென்றால் இப்படிப்பட்ட அசுத்த நிலைகளை உருவாக்கவதே நாம்தான் இதில் அரசுக்கும் அளப்பரிய பங்குள்ளது இதையெல்லாம் சீரமைக்க நமக்கு நேரமில்லை,
அப்படியொரு அவசர நிலை இன்றைய சந்ததியினர்களுக்கு!

3) மாசுபடிந்த குடிநீர்,
உயிரை காக்கும் குடிநீர் இன்று எண்ணற்ற நோய்கள் உருவாக இதுவே ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது, குடிநீர் குழாயை திறந்தால் பலவண்ணங்களில் நீர் வருகிறது, அரசோ அதன் பங்கிற்கு பலவகையான பூச்சிகொல்லி மருந்துகளை கலந்து நம்மை கொல்ல துவங்கிவிட்டது, இதையெல்லாம் தட்டிக் கேட்கவோ சரிசெய்யவோ நேரமில்லை,
அப்படியொரு அவசர நிலை இன்றைய சந்ததியினர்களுக்கு!

4) உடற்பயிற்சி இன்மை,
இன்றுள்ள இளைய சமுதாயம் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது அனைத்துவிதமான விளையாட்டுகளையும் கணிணியிலேயே விளையாண்டு விடுகிறார்கள் ஒருவிதத்தில் இதுவும் உடல் நலக்கேட்டிற்கு காரணம் தான், களத்தில் விளையாண்ட எம் காளையர்கள் கணிணியில் விளையாட தொடங்கியது ஏனோ?
இனியாவது தங்கள் வீட்டு பிள்ளைகளை மைதானத்தில் விளையாடி ஆரோக்கியத்துடன் வாழவழி செய்வார்களா இன்றைய அவசர நிலை சந்ததியினர்கள்?!

5) வர்த்தகமயமான மருத்துவம்,
ஒரு பேச்சுக்கு சொல்வார்கள் கடவுளும் மருத்துவர்களும் ஒன்று என்று, ஆனால் இன்றுள்ள பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவம் படிக்கிறார்களோ இல்லையோ நோயாளிகளிடமிருந்து எப்படி பணம் பறிப்பது என்ற வித்தையை நன்றாகவே கற்றுத்தேர்ந்துள்ளார்கள், நாம் மருத்துவர்களை நம்பித்தான் நம்மை சிகிச்சைக்காக அவர்களிடம் ஒப்படைக்கின்றோம் ஆனால் அவர்களோ சற்றும் மனசாட்சிக்கு பயப்படாமல் நோயாளிகளிடமிருந்து முடிந்தளவுக்கு பணத்தை கறந்து விடுகிறார்கள்,
இதற்கு ஒரே தீர்வு, மது புகையிலை மற்றும் உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டோழித்து அளவோடு சாப்பிட்டு இரவோடு உறங்கி திடலோடு விளையாடி வளமோடு வாழவேண்டும்!

அன்புடன் அதிரையிருந்து,
வஜிர் அலி.

Close