அதிரை ராமானுஜன் அமீனை தெரியுமா உங்களுக்கு..?

அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அனைத்து துறைகளிலும் திறமைசாளிகள் நிறைந்த ஊர். கல்வி, மென்பொருள், இலக்கியம், அறிவியல், அரசியல், பொருளாதாரம், சமையல், ஓவியம், ஊடகம், விளையாட்டு பல துறைகளில் நமதூர் வாசிகள் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பல திறமைசாளிகள் நம்மில் ஒருவராக மக்களால் அதிகம் அறியப்படாமல் உரிய அங்கீகாரம் இன்றி உள்ளனர். இவர்களை தொடர்ந்து நமது அதிரை பிறை வெளிகாட்டி வருகிறது.

அந்த வகையில் அதிரையில் வாழும் ஒரு கணித மேதையை பற்றி நாம் இந்த செய்தியில் காண உள்ளோம்.

அதிரை சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் அஹமது அமீன். பொறியாளரான இவர் கணிதத்தில் டிஃபெரென்சியேசன் முதல் அல்ஜீப்ரா வரை அத்தனையும் அத்துபிடி. துபாயில் பணியாற்றி வரும் இவர் அங்குள்ள மாணவர்களுக்கு கணக்கு பாடங்களை எடுத்து வருகிறார். அனைத்து கணக்குகளையும் அசராமல் போடும் இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் கணித அறிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த களம் தான் யூடியூப். நகைச்சுவை, அரசியல், செய்தி, விளையாட்டு, பொழுபோக்கு உள்ளிட்ட தலைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யூடியூப் பக்கங்களுக்கிடையே கணிதத்தை கற்பிக்க யூடியூப் பக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார் அஹமது அமீன். இதற்காக தனியாக இணையதளத்தையும் அவர் தொடங்கியுள்ளார். கடந்த 7 மாதங்களாக இந்த யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் அமீன் இது வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் 480 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றை கொண்டு சேர்க்கும் நோக்கில் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றிலும் தனது வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார். இதற்காக அவர் எந்த கட்டணமும் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக அவர்கள் பயன்படுத்தும் சமூக வகைதளங்களின் மூலமே கொண்டு சேர்க்கும் அஹமது அமீனை இன்னாளில் வாழ்த்துவோம்.

Close