சாலை விபத்தில் உயிர் தப்பிய ஜவாஹிருல்லாஹ் அவர்களின் நன்றி….!

Want create site? Find Free WordPress Themes and plugins.
ராமநாதபுரத்திலிருந்து...மமக-தமுமுக மூத்த தலைவரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் அவரது கார் ஓட்டுனர் சகோதரர் ஆதில் ஆகியோர் கடந்த அக்டோபர் 9 அன்று மதுராந்தகம்
அருகே நடந்த சாலை

விபத்தில் சிக்கி எந்த பாதிப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் கிருபையால் உயிர் தப்பி இருக்கிறார்கள்.இது குறித்து பேரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம்…

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!” உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் – (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:78,79)
பேரன்புமிக்க அன்பர்களே
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் பேரருள் நிலவட்டுமாக.
கடந்த அக்டோபர் 9 அன்று இராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கி சைலோ மகிழுந்தில் வரும் போது மதுராந்தகம் அருகில் ஒரு பெரும் விபத்தில் நானும் ஒட்டுனரும் சிக்கிக் கொண்டோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனத்தில் நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
மரணத்தின் நுழைவாயிலுக்குச் சென்ற என்னையும் எனது ஒட்டுனராக கடந்த 2001 முதல் இருந்து வரும் சகோதரர் ஆதிலையும் இறைவன் தான் காப்பாற்றினான். பலமான கோட்டையில் அல்ல மிக பலவீனமான நிலையில் நாங்கள் இருந்த போதினும் இறைவன் நினைத்தால் மனிதர்களை காப்பாற்றலாம் என்பதற்கு நாங்கள் உதாரணமாகி விட்டோம். ஏனெனில் நாங்கள் பயணம் செய்த வண்டியினை பார்த்தவர்கள் யாரும் அதில் பயணம் செய்தவர்கள் சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியதை நம்ப மாட்டார்கள். It was a major accident but we escaped with minor bruises. (அது ஒரு பெரும் விபத்து ஆனால் நாங்கள் சிறு சிராய்ப்புகளுடன் உயிர் பிழைத்தோம்) இதற்கு இறைவனுக்கு மிகப் பெரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஒரு புதிய வாழ்வை இறைவன் அளித்துள்ளான் என்பதே பேரூண்மையாகும்.
ராமநாதபுரத்திலிருந்து...
விபத்து நடந்த அன்று ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்ட போது எடுத்த படம்
எனது இராமநாதபுரம் தொகுதியில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் முன்பே திட்டமிடப்பட்டிருந்து ஆய்வு பணிகளுக்காக சென்றிருந்தேன். வாலந்தரவை, தனுஸ்கோடி மற்றும் இராமேஸ்வரத்தில் அந்த பணிகளை முடித்து விட்டு செவ்வாய் மாலையே சென்னைக்கு திரும்பியிருக்க வேண்டும். புதன் அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பார்வையாளர் முன்னிலையில் நடைபெறும் அதில் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பங்குக் கொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்து சில அலுவல்களை முடித்து விட்டு பகல் 12.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டேன்.
வழியில் சமயபுரத்தில் உள்ள அன்வாருல் உலூம் ஐடிஐ பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றி விட்டு அதன் பிறகு ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பயணம் தொடர்ந்தது. வழியில் கடுமையான காற்றுடன் மழை பொழிந்தது. மிக மிதமான வேகத்தில் பயணம் தொடர்ந்தது. சுமார் 7 மணியளவில் கும்பகோணம் டிகிரி காபி கடையில் வண்டியை நிறுத்தி காபி சாப்பிட்டு விட்டு 15 நிமிடங்கள் ஒய்விற்கு பிறகு எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது.
மதுராந்தகம் ஏரி கரை அருகே வண்டி சென்றுக் கொண்டிருந்த போது தான் இப்போது நினைத்தாலும் நெஞ்சை பதற வைக்கும் அந்த சம்பவம் ஒரு நொடி பொழுதில் நடைபெற்று முடிந்தது. சாலையில் மழை நீர் வழிந்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பு சென்ற ஒரு டிரைலர் சரக்குந்து தனது தடத்திலிருந்து நாங்கள் சென்ற தடத்திற்கு தீடீரென திரும்ப எனது ஒட்டுனர் மோதலை தவிர்ப்பதற்காக பிரேக்கை அழுத்தினார். ஆனால் பிரேக் வேலைச் செய்வில்லை. அந்த நேரத்தில் வண்டி பறக்க ஆரம்பித்தது. நமது வாழ்வு முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் அல்லாஹ் எங்களை காப்பாற்று அல்லாஹ் எங்களை காப்பாற்று என்று குரல் எழுப்பினேன். வண்டி சாலையை கடந்து பக்கவாட்டிலிருந்து புதரில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது. ஒரே இருட்டு. சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஆதில் முனங்கிக் கொண்டிருந்தான். எனக்கு பின் பக்கம் பார்த்தேன். வலது புறம் உள்ள நடு கதவின் கண்ணாடி உடைந்து இருந்தது. தவிழ்ந்துக் கொண்டு கண்ணாடி வழியாக வெளியே வந்தேன். உடனே வாகனத்தில் சென்றவர்கள் நிறுத்தி விட்டு எனது உதவிக்கு வந்தார்கள். வண்டியில் ஒட்டுனர் இருப்பதை சொன்ன போது அவர்களில் இருவர் ஆதிலை மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். இதன் பிறகு உதவிக்கு வந்தவர்கள் எங்கள் செல்பேசிகளை உள்ளேச் சென்ற எடுத்துக் கொடுத்தார்கள். உடனடியாக நான் தகவல்களைச் சொல்ல அருகில் உள்ள மதுராந்தகம் தமுமுக சகோதரர்கள் விரைந்து வந்தார்கள். பிறகு காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாங்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு பிறகு இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பினோம்.
ஆதிலுடன்
ஓட்டுனர் ஆதிலுடன்…..
தொலைக்காட்சிகளில் இந்த விபத்து குறித்து செய்திகள் பரவ தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள சகோதரர்கள் பதறி போய் செல்பேசி வாயிலாக நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அனைவரது அழைப்பிற்கும் பதில் சொல்ல இயலவில்லை. இவர்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், உலமா பெருமக்கள் என்று பட்டியல் நீளுகின்றது. அந்த தருணத்தில் அவர்கள் காட்டிய பரிவு நெஞ்சில் என்றும் பசுமையாக பதிந்து இருக்கும். இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் செய்தி அறிந்து செய்த பிரார்த்தனைகளுக்கு எப்படி கைமாறு செய்வது?
விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய கார் தலைக் குப்புற கவிந்து சேதம் அடைந்திருக்கும் காட்சி..
இந்த விபத்தில் பெற்ற படிப்பினைகள்:
1. நான் முதன் முதலாக 2003ல் ஜெனிவாவிற்கும் அதன் பின் வளைகுடா நாடுகளுக்கும் சென்ற போது தான் அங்கு மகிழுந்தில் செல்பவர்கள் கட்டாயமாக சீட்பெல்ட் என்னும் இருக்கை வளையம் அணிவதை கண்டேன். அப்போது முதல் நாடு திரும்பிய பிறகு சீட் பெல்ட் அணிந்தே பயணம் செய்கிறேன். காரில் ஏறி அமர்ந்ததும் நான் செய்யும் முதல் வேலை சீட் பெல்ட் அணிவது தான். விபத்து நடைபெற்ற அன்றும் சீட் பெல்ட் அணிந்தே பயணம் செய்தேன். இதன் விளைவாக இறைவனின் பேரருளால் கார் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையிலும் நான் அமர்ந்திருந்த முன் இருக்கையின் இடது பக்கம் மிகப் பெரிய அளவில் கார் அடிப்பட்டிருந்தாலும் நான் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கூட கீழே விழவில்லை. எனக்கு உடலில் எங்கும் காயம் ஏற்பட வில்லை. காலில் ஏற்பட்ட சீராய்ப்பு கூட கீழே இறங்கும் போது சிதறி கிடந்த கண்ணாடி துகள்களினால் ஏற்பட்டது தான். இந்தியாவில் பல மாநிலங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது சீட்பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வெட்டுத் தீர்மானம் கூட முன்மொழிந்தேன். எனவே நீங்கள் முன்சீட்டில் அமர்ந்தாலும் பின் சீட்டில் அமர்ந்தாலும் ஒட்டுனர் உட்பட அனைவரும் சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது அறிவுடமையானது.
2. மழை நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அல்லது மிக குறைவான வேகத்தில் 40 கி.மீ. அளவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த சூழலில் வண்டிகளில் பிரேக் உட்பட பிற உபகரணங்களின் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது.
3. பயணம் செய்யும் போது கண்டிப்பாக ஒரு துண்டு சீட்டில் முக்கிய தொலைபேசி எண்களை எழுதி வைத்திருக்க வேண்டும். செல்பேசி மட்டும் நம்பக் கூடாது.
4. பயணத்தின் போது பிறருக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் போது அவர்களுக்கு உடனடியாக அந்த தருணத்தில் உதவிடும் பண்பு மகத்தானது. எனக்கு அந்த நேரத்தில் உதவிய பெயர் தெரியாத அந்த அன்பர்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் தருவானாக.
ரன் அவுட் ஆகாமல் வாழ்க்கை என்னும் இன்னிங்க்சை தொடர்வதற்கு இறைவன் அருள் செய்துள்ளான். இது என்னை பொருத்த வரை ஒரு எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் தான். இன்சா அல்லாஹ் முன்பை விட வீரியாமாக இறையுணர்வுடன் வாழ்வதற்கும் மக்கள் சேவை செய்வதற்கும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். எனது நலனில் அக்கறைக் கொண்டு எல்லா வகையிலும் உதவி செய்த அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும் என்று நெஞ்சுறுக பிரார்த்திக்கின்றேன்.
– ஜவாஹிருல்லாஹ்.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author