அரவணைப்பின்றி தவிக்கும் அடுத்த தலைமுறை..!

குழந்தைகள்… ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்நாள் மகிழ்ச்சியை தரும் தேவதைகளாக உள்ளன… வீட்டையும், நாட்டையும் தாங்கும் நாளைய தூண்களாக இருக்கின்றன… குழந்தைகள் தினமான இன்று அவர்களை நல்ல தலைமுறையாக உருவாக்குவதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன… முற்காலத்தில் நமது மக்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த போது குழந்தைகள் முறையான கண்காணிப்பின் கீழும், பெற்றோர்களின் அரவணைப்பிலும் வளர்ந்து வந்தனர். ஆனால் தற்போது பெரும்பாலான தம்பதியினர் தனியாக வசிப்பதாலும், பெற்றோர்கள் இருவரும் பணிகளுக்கு சென்றுவிடுவதாலும் குழந்தைகள் கண்கானிப்பு இன்றி முறை தவறி செல்லும் நிலை உள்ளது.

காலை எழுந்தவுடன் பள்ளி, மாலை வந்தவுடன் டியூசன் என குழந்தைகள் நாள்தோறும் படிப்பு படிப்பு என்று ஓடிக்கொண்டிருப்பதால் அவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பு வளையங்களை விட்டு தவறிச்செல்கின்றனர். குழந்தைகள் தங்களுடன் இருக்கும் சிறிது நேரத்திலும் பெற்றோர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், செல்போன்களிலும் கவனத்தை செலுத்துகின்றனர். சமூக வலைதளத்தில் நல்ல கருத்துக்களை பரப்பும் பெற்றோர்கள், அந்த சமயத்தில் தங்கள் குழந்தைகளை கவனிக்க தவறி விடுகின்றனர். அறநெறியை போதிக்க வேண்டிய பள்ளிகளும் பணத்தையும், மதிப்பெண்களையும் மையமாக கொண்டு செயல்படுவதால் குழந்தைகளுக்கு அங்கும் ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதில்லை.

விளைவு… புகை, போதைப்பழக்கங்கள் தொடங்கி திருட்டு கொலை வரை பல்வேறு குற்றச்செயல்களில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோருக்கு அடுத்த அந்தஸ்த்தில் இருக்கும் ஆசிரியர்களாலேயே குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.  ஆனால் குழந்தைகளுக்கு எதிரான பெரும்பாலான வழக்குகள் கிடப்பில் போடப்படுவது, குற்றவாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைகின்றன.

நாளை தலைமுறையை சரியாக கட்டமைக்க இன்றைய குழந்தைகளை செதுக்கும் சிற்பிகளாக பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசாங்கமும் இருக்க இன்னாளில் உறுதியேற்போம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி,

உதவி ஆசிரியர்-மாலை முரசு தொலைக்காட்சி

Close