அதிரையில் உடைக்கப்படும் பூட்டுக்கள்… திருடப்படாத பொருட்கள்… மர்மம் என்ன?

திருட்டு முயற்சி 1:

கடந்த நவம்பர் 11, 2017 அன்று

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த குடும்பத்தினர் நீண்ட நாட்களுக்கு பிறகு சம்பவத்தன்று காலை சென்னையிலிருந்து அதிரைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களின் வீட்டின் வாசல் மற்றும் கொல்லை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வீட்டில் இருந்த எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டு முயற்சி 2:

கடந்த நவம்பர் 12, 2017 அன்று

அதிரை ஆஸ்பத்திரி தெரு டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் மருத்துவமனை அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நள்ளிரவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோ கதவுகளை உடைத்துள்ளனர். இருப்பினும் எந்த பொருட்களும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

திருட்டு முயற்சி 3:

கடந்த நவம்பர் 17, 2017 அன்று

அதிரை கடற்கரைதெருவை சேர்ந்த ஹாஜா முஹைதீன் தன்னுடைய பெட்டிக்கடையை காலை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடையில் பொருட்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

அதிரையில் அண்மை காலங்களாக நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களில் வீடுகள், கடைகளின் பூட்டுகள் உடைக்கப்படுவதும் பொருட்கள் திருடப்படாததும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் இல்லாததால் திருடர்கள் கொள்ளையடிக்காமல் செல்கின்றனரா? அல்லது பெரிய கொள்ளை முயற்சிக்கான முன்னோட்டமாக இது இருக்குமா? அல்லது வேறு காரணங்கள் இதில் இருக்குமா என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களை தொடர்புபடுத்தி பார்த்தால் மூன்று நிகழ்வுகளையும் ஒரே கும்பல் தான் செய்திருக்கும் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Close