திருவாரூரில் சுல்தான் என்பவரை கத்தி முனையில் மிரட்டி ₹1.50 கொள்ளை (வீடியோ)

திருவாரூரில் உள்ள தனியார் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தில் சனிக்கிழமை பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1.50 லட்சத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் விஜயபுரத்தில் தனியார் பணப் பரிவர்த்தனை நிறுவனம் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த முகமது இத்ரியாஸ்.

இந்நிலையில், முகமது இத்ரியாஸ் வெளியே சென்றதால், சனிக்கிழமை அவரது உறவினர் சுல்தான் ஹாலிஸ் (60) நிறுவனத்தில் இருந்துள்ளார். அப்போது பிற்பகலில், முகத்தை துணியால் மூடிக்கொண்டு இளைஞர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு அவர் தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்து நகர போலீஸாருக்கு தகவல் அளித்ததன்பேரில் அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடையிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் முகத்தை மூடியபடி உள்ளே வரும் இளைஞர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது பதிவாகியிருந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் எதிர்ப்புறத்தில் உள்ள கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில், கடைக்குள் நுழைந்த இளைஞர் சுமார் ஒரு நிமிட இடைவெளியில் கடையிலிருந்து வெளியே வந்து ஓடுவது தெரியவந்தது. இந்த பதிவுகளின் அடிப்படையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Close