தஞ்சை மாவட்டத்திற்கு ₹1,091 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!

தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டங்கள்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சையில் இன்று  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.1091 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்காக புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. காலையில் விழா பந்தலில் எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் துரைக்கண்ணு திறந்து வைத்தார். இதில் எம்.பிக்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏக்கள் சேகர், கோவிந்தராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மக்கள் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை கண்டுகளித்தனர்.

மாலை 3 மணிக்கு தொடங்கிய நூற்றாண்டு விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசினார். மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் எம்பி வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர் உருவப் படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன், ரூ.632 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான 105 முடிந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ.186 கோடிேய 77 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 43 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 40,101 பயனாளிகளுக்கு ரூ.271 கோடியே 90 லட்சத்து 30ஆயிரத்து 387 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.1,091 கோடியே 15 லட்சத்து 43,387 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை நகரம் முழுவதும் அதிமுக கொடி, பேனர்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Close