தினம் 01 ஹதிஸ்:03-வட்டி உண்ணுதல்

Want create site? Find Free WordPress Themes and plugins.
Post image for வட்டி உண்ணுதல்அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே!

அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர் தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.
வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)
வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author