இனி மண்ணெண்ணெயும் ரேஷன் விலையில் வாங்க முடியாது…

வரும் 2020ம் ஆண்டுக்குள் மண்எண்ணெய் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’, ‘சவுபாக்கியா’ ஆகிய திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் இலக்குகளை அடைந்துவிடும் என்பதால், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, சவுபாக்கியா ஆகிய திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி மண்எண்ணெய் பயன்பாட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. இந்த நிதியாண்டில் மண்எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒட்டுமொத்த மானியமாக ரூ. 9 ஆயிரத்து 79 கோடி வழங்கியுள்ளது.

ஆனால், மண்எண்ணெய் மானியத்தைப் பொருத்த வரை கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரத்து 595 கோடியாக இருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. இந்த மானியம் குறைவு என்பது, மக்கள் மத்தியில் மண்எண்ணெய் பயன்பாட்டை குறைத்து இருப்பதையே காட்டுகிறது.

இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் ஆய்வு குழு வட்டாரங்கள் கூறியதாவது-

‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’, திட்டம் மூலம் வீடுகளுக்கு 95 சதவீதம் சமையல் எரிவாயு சிலிண்டரும் ‘சவுபாக்கியா’ திட்டம் மூலம் 100 சதவீதம் வீடுகளுக்கு மின் இணைப்பும் வழங்க முடியும்.மண்எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதால், வரும் 2020ம் ஆண்டுக்குள்மண்எண்ணெய்க்கான மானியத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மண்எண்ணெய் பயன்பாடு 33 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பொது வினியோகம் முறையில் வழங்கப்படும் மண்எண்ணெயைபல மாநிலங்கள் தாங்களாக முன்வந்து குறைத்துக்கொண்டன, சில மாநிலங்களுக்கு குறைக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஆந்திர பிரதேசம், சண்டிகர், டெல்லி, தாதர் நாகர் ஹவேலி, டாம் மற்றும் டையு, ஹரியானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மண்எண்ணெயை கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் மக்கள் மண்எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, சமையல் சிலிண்டர் பயன்பாட்டுக்கு அதிகமாக மாறி வருவதும் முக்கிய காரணம். 2016-17ம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Close