உலகில் முதன்முறையாக ஒட்டகங்களுக்கான மருத்துவமனை துபாயில் திறக்கப்பட்டுள்ளது

வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம், அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்படும் ஒட்டகங்களைப் பராமரிக்க பிரத்யேக சிறப்பு மருத்துவமனை ஒன்று துபாயில் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை 11 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒட்டகங்களுக்கு கால்களில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சையளிக்க பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்குகள் இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குநர் முகமத் அல் ப்ளூஸி தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 20 ஒட்டகங்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். இம்மருத்துவமனையில் எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் செய்வதற்கு 110 டாலர்கள் பெறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு 1000 டாலர்கள் முதல் வசூலிக்கப்படுகிறது. வளைகுடா பாரம்பரியத்தில் முக்கிய அங்கமாக விளங்கும் ஒட்டகங்களை பாதுகாக்கவே இந்த பிரத்யேக மருத்துவமனை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close