பதட்டம் வேண்டாம்… ஆதார் காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு

அரசு நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலும் உச்ச நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், இடைக்கால உத்தரவாகப் பிறப்பித்த அறிவிப்பு வருமாறு:

செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதியை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அரசு நலத்திட்டங்கள், பல்வேறு சேவைகளுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வங்கியில் வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டியதில்லை. அதேநேரத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் நேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்தது தொடர்பான ஆவணத்தை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நேரில் காட்ட வேண்டும்.

இந்த வழக்கு மீது வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு இறுதி விசாரணையைத் தொடங்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வியாழக்கிழமை இதுதொடர்பாக கேள்வியெழுப்பியபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.வி. வேணுகோபால், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31 வரை நீட்டிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

அதையேற்று, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 5 நீதிபதிகள் சார்பில் மூத்த நீதிபதி சந்திரசூட் இந்த உத்தரவை வெளியிட்டார்.

Close