சவுதி விமானத்தில் கோளாறு 226 பேர் தப்பினர்!

சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 10.30 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 226 பயணிகள் இருந்தனர். அவர்களில் 100 பேர் மெக்காவுக்கு புனித பயணம் செல்பவர்கள். விமானத்தில் அனைத்து பயணிகளும் ஏறியதும் கதவுகள் அடைக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமான நிலைய பொறியாளர்கள் விரைந்தனர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பொறியாளர் குழுவினர் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். 

நள்ளிரவு வரை பழுதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் இறக்கப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவுதான் இந்த விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நன்றி:தினகரன்

Advertisement

Close