சவூதி அரேபியா-ஏமன் போர் முடிவுக்கு வந்தது! போரில் 700 பேர் மரணம்!

உள்நாட்டு போர் தீவிரம் அடைந்த ஏமனில் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக சவுதிஅரேபியா அறிவித்து உள்ளது. மனிதாபிமான உதவிக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் களமிறங்கி உள்ளனர். இவர்களை எதிர்த்து, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. 

இந்த உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியது. சவுதி கூட்டுப்படைகளின் வலிமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை வலுத்து வருவதால் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி உள்ளனர். 2,200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தினார். இந்த நிலையில், தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல்களில் 28 பேர் பலியாகினர். போர் தொடங்கியதில் இருந்து சவுதி அரேபியா 2,000 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஏமனில் அரசுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பெரிதும் உதவிசெய்து வருகிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஈரான் கடல்வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம், மருத்துவம் மற்றும் பிறஉதவி பொருட்களை வழங்கினர். 

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் உதவி கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா ஏமன் கடற்பகுதிக்கு விமானம் தாங்கிய போர்கப்பலை அனுப்பியது. இந்நிலையில் ஏமனில் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக சவுதிஅரேபியா அறிவித்தது. இருப்பினும் தேவைப்படும் போது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது. அரசியல் தீர்வு காண சவுதி அரேபியா கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் சவுதியின் படைகள் நிலை கொண்டு உள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஏமனில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், ராணுவ நடவடிக்கையினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தினோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

சவுதி அரேபியா போர் நிறுத்தம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ’நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளது.

Advertisement

Close