சமூக ஊடக சுதந்திரத்திற்காக வழக்கு தொடுத்து வென்ற ஷ்ரேயா சிங்கால்!

இணைய உலகமே, சமூக ஊடக சுதந்திரத்தை காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடி கொண்டிருக்கிறது. சமூக ஊடக கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்டு அபாயத்திற்கு வழிவகுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குறிய 66ஏ பிரிவு செல்லாது என அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு மூலம் இணைய சுதந்திரம் காக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருப்பவர் 24 வயது இளம் பெண்ணான ஷ்ரேயா சிங்கால். இவர் தான் கடந்த 2012ஆம் ஆண்டியில் சர்ச்சைக்குரிய இந்த பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.

ஷ்ரேயா வழக்கறிஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாய் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பாட்டி நீதிபதியாக இருந்தவர். டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த ஷ்ரேயா, பின்னர் பிரிட்டன் சென்று 7 பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பயின்றார். அங்கு படிப்பை முடித்துக்கொண்டு 2012ல் இந்தியா திரும்பினார்.

இந்தியாவில் சட்டம் பயிலும் எண்ணத்தில் இருந்தவர், மும்பையில் கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டதை கண்டு திடுக்கிட்டார். செய்திகளை பின் தொடர்வதில் ஆர்வம் உள்ள ஷ்ரேயா தொடர்ந்து சமூக ஊடகச் செயல்பாட்டிற்காக புதுச்சேரியில் தொழலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதையும், அதனை தொடர்ந்து மும்பையில் இரண்டு கல்லூரி மாணவிகள் பேஸ்புக் பதிவுக்காக கைது செய்யப்பட்டதை அறிந்து கொதித்தார்.

66ஏ சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்துவதால் ஆவேசம் அடைந்தவர், இது தொடர்பாக தனது அம்மாவுடன் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தார். அப்போது அம்மா, அவரிடம் இதற்காக நீயே ஏன் பொதுநல மனு தாக்கல் செய்யக்கூடாது என கேட்டிருக்கிறார். இதனையடுத்து வழக்கறிஞர் உதவியுடன் ஷ்ரேயா இதற்கான மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் 66ஏ பிரிவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பு வந்த பிறகு ஷ்ரேயா கூறுகையில், ”நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த சட்டப்பிரிவு நம்முடைய உரிமைகள், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருந்தது, இப்போது உச்சநீதிமன்றம் அதை நிலை நிறுத்தி உள்ளது” என உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

சிறைக்கு செல்லும் அச்சத்தில் யாரும் தாங்கள் சொல்ல விரும்புவதை சொல்லாமல் இருக்கக் கூடாது, நீதிமன்றம் மக்களின் உரிமையை காப்பாற்றி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக சுதந்திரம் காக்கப்பட்டுள்ளதை கொண்டாடும் நிலையில் நிச்சயம் ஷ்ரேயாவுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.

நன்றி:விகடன் 

Advertisement

Close