நவீன இஸ்லாமிய பெண் தொழிலதிபர் இஷ்ரத்!

மும்பை ஷாலிமார் ஹோட்டல்-தெற்கு மும்பையில் அமைந்துள்ள சுவையான உணவுகள் கிடைக்கும் பெரிய உணவகம் பயனுள்ள கல்வியுடன் மார்க்க கல்வியையும் போதிக்கும் ஷஃபா-மாறுபட்ட பள்ளிக்கூடம். இவற்றை வெற்றிகரமாக நிர்வகிப்பவர் ஒரு முஸ்லிம் பெண் ஆவார். அதுவும் நிகாப் எனும் முகத்தை துணியால் மறைக்கும் முஸ்லிம் பெண். வாருங்கள் இஷ்ரத்தை சந்திப்போம்.

42 வயதான கணவனை இழந்த கைம்பெண்ணாக 5 பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்தும் இஷ்ரத், மிகவும் வெற்றிகரமாக பெரிய உணவகத்தையும், பள்ளிக்கூடத்தையும் நிர்வகித்துவருகிறார். உ.பி.மாநிலம் ஆஸம்கரை சார்ந்த இஷ்ரத் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர். 18-வது வயதில் ஷஹாபுத்தீன் ஷேக்கை திருமணம் செய்து கொண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

ஷன்னோ என தனது குடும்பத்தினரால் செல்லமாக அழைக்கப்படும் இஷ்ரத்தின் திருமண வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷமாகவும் 2002 வரை நீடித்தது. அப்பொழுது நடந்த விபத்து ஒன்று இஷ்ரத்தின் வாழ்வில் பேரிடியாக மாறியது. அவருடைய கணவர் அவ்விபத்தில் மரணமடைந்தார். 3 குழந்தைகள் காயமுற்றன.

இதனைக் குறித்து அவர் twocircles.net இணையதள இதழுக்கு அளித்த பேட்டியில்,’அந்த பயங்கரமான விபத்து எனது வாழ்க்கையை துண்டுதுண்டாக சிதறடித்தது.அவ்வேளையில் ஒருபுறம் எனது குழந்தைகள் கவனித்துக் கொண்டு மறுபுறம் வியாபாரத்தையும் ஏற்று நிர்வகிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

மேலும் எனது கணவரின் கனவான ஸஃபா பள்ளிக்கூடத்தையும் நிர்வகிக்க வேண்டும். அவ்வேளையில் எனது தொழிலதிபர்களான சகோதரர்கள் மற்றும் எனது மாமியாரும் எனக்கு உத்வேகமளித்தார்கள். எனது கணவரின் தாய்க்கு ஒரே மகன் தான் எனது கணவர். 

இந்நிலையில் தான் நான் 18 ஆயிரம் சதுர அடியில் 350 பணியாளர்களை கொண்டு பலகோடி ரூபாய் முதலீட்டில் செயல்படும் ஷாலிமார் உணவகத்தை நிர்வகிக்க தலைப்பட்டேன். எனக்கு உந்துசக்தி நபி(ஸல்…)அவர்களின் மனைவியான கதீஜா(ரலி…)ஆவார். அவர்கள் ஒரு வர்த்தகம் புரிந்த பெண்மணியாவார். இறுதியாக எனக்கு ஏற்பட்ட செயல் தூண்டலால் நான் வியாபாரத்தை நிர்வகிக்க துவங்கினேன்.’ எனக்கூறுகிறார் இஷ்ரத்.

வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதற்கு ஹோட்டல் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்களின் ஒத்துழைப்பும் காரணம் என்பதை இஷ்ரத் கூற தயங்கவில்லை. அவர் அவரது பணியாளர்களை பாசத்துடனும் பரிவுடனும் நடத்துகிறார். அர்ஷாத்-இவர் ஹோட்டலில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார். அவர் ,’மேடம் என்னை எப்பொழுதும் அர்ஷத் பாய் (சகோதரா) என பாசத்துடன் அழைப்பார்கள்’ என கூறுகிறார்.

‘அன்பு இந்த யாரையும் இந்த உலகில் வென்றுவிடும். இந்த மக்கள் நான் துன்பத்தில் இருந்த பொழுது உதவினார்கள். நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்’-இஷ்ரத் கூறுகிறார். இஷ்ரத்துடன் அவரது மகன் உமைரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 16 வயதான பொழுதே வியாபாரத்தில் பங்கேற்க துவங்கிவிட்டார். ஷாலிமார் ஹோட்டலில் இரண்டுகிளைகளும் உருவாகிவிட்டன.

தனது எதிர்கால திட்டங்களை குறித்து இஷ்ரத் கூறுகையில், ’ஹோட்டலை எனது மகன் உமைரிடம் ஒப்படைக்கப்போகிறென். அவர் இத்தொழிலில் கைத்தேர்ந்துவிட்டார். எனது கவனத்தை ஸஃபா பள்ளிக்கூடத்தில் செலவழிக்கப்போகிறேன். இவ்வருடமே இளநிலை கல்லூரி ஒன்றையும் துவக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.’ என்கிறார்.

நிகாப் குறித்து அவர் கூறுகையில்,’நிகாப் எனக்கு ஒரு போதும் தடையாக இல்லை. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் வெளியாட்களுடனும், எனது பணியாளர்களுடனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட எனக்கு உதவுகிறது’ என்கிறார்.

Advertisement

Close