சென்னை தலைமை செயலகம் முற்றுகை!ஆயிரக்கணக்கானோர் கைது!(படங்கள் இணைப்பு)

லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 3 முதல் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த எஸ்.டி..பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி பேசுகையில்; மக்கள் சேவைக்காக அரசின் அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நடுத்தர ஏழை, எளிய மக்கள் தங்களின் உரிமைகளை பெற மிகுந்த சிரமத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். அதேபோன்று அரசின் திட்ட ஒதுக்கீடுகள், கனிம வளங்கள் ஆகியவற்றிலும் பல ஆயிரம் கோடி ஊழல், முறைகேடுகள் குறித்த செய்திகள் வருவதும் நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் இத்தகைய ஊழல் முறைகேடுகளே நாட்டின் முனேற்றத்துக்கும்,வறுமையை ஒழிப்பதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் சட்டபூர்வமாகிவிட்டதோ என என்னும் அளவிற்கு அது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கமிஷன் இல்லாமல் டெண்டர் மற்றும் காண்ட்ராக்ட்டுகள் இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு துறையின் கீழ்மட்ட அதிகாரிகளும் மேல்மட்ட அதிகாரிகளும் முறைகடுகளுக்கு துணை போவதற்காக மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் எனும் நிலையும், அரசு பணியிடங்களை பெறுவதற்கும், உயர் பதவிகளை பெறுவதற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் அதிகரிப்பது கவலைக்குறிய ஒன்று.
நாட்டிலேயே தேர்தலுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலமாக தமிழகம் உருவாகிவருவதும், வாக்குக்கு ரூ.4000, ரூ.5000 என கொடுத்து மக்களை லஞ்சம் வாங்கும் பழக்கத்தை ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளுமே உருவாக்குகின்றனர். இந்த அவலங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டப் பிரிவு63-இன் படி, 2014 ஜனவரியில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் முதல் ஓர் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மூலமாகவும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு இதுதொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆகவே தமிழகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த லோக் அயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான அழுத்தத்தை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் எஸ்.அமீர் ஹம்சா, டி..ரத்தினம், முகம்மது பிலால், பொருளாளர் ஏ.அம்ஜத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், உஸ்மான் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Advertisement

Close