இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி மாணவிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 19 வயதுடைய மாணவிகள் 3 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (19). பரமக்குடி அருகே உள்ள வீரானூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெளசல்யா (19), லட்சுமி (19). இவர்கள் மூன்று பேரும் தோழிகள். பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இவர்கள் மூன்று பேரும் படித்து வந்தனர். தனியார் பேருந்தில் இவர்கள் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

இன்று காலையும் மூன்று மாணவிகளும் கல்லூரி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி சென்ற தனியார் பேருந்தின் முன்புறத்தில் ஏறினர். பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் படுவேகமாக மோதியது.

இதில், பேருந்தில் முன்பகுதியில் இருந்த கல்லூரி மாணவிகள் கெளசல்யா, லட்சுமி, வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனின் டிரைவர் முகமது அப்துல்லா (45) மற்றும் முருகன் ஆகியோரும் பலியானார்கள். மேலும் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாணனன் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.சாலை விபத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Close