கோடியக்கரை கடற்கரை ஒரு சிறப்பு பார்வை!(படங்கள் இணைப்பு)

போன வாரம் நமது அதிரை பிறை இணையதளத்தில் “கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம்” பற்றி பார்த்தோம்.இந்த வாரம் கோடியக்கரை கடற்கரை பற்றி ஒரு சிறப்பு பார்வை :

கும்பல் கும்பலாக மான்களைத் தாண்டி, ஐந்து கி.மீ காட்டுப் பாதையில் பயணித்தால் வருகிறது  கோடியக்கரை கடற்கரை. இது பாக் ஜலசந்தியும், வங்காள விரிகுடாவும் சந்திக்கும் அருமையான கடற்கரை. நாம் சென்றபோது, சில காட்டுப் பன்றிகள், குடும்பத்துடன் பேக் வாட்டர் ஏரியாவில் ஹாயாக வாக்கிங் போய்க்கொண்டிருந்தன. ஜனவரி மாதம் வந்தால், பாக் ஜலசந்தி கடற்கரை ஓரமாக ‘பாட்டில் நோஸ் டால்பின்’கள் குடும்பம் குடும்பமாக வருவதைக் காணலாம் என்றார் ஒருவர். கோடியக்கரை கடற்கரையில் இருந்து யாழ்ப்பாணம் 27 நாட்டிகல் மைல் என்றும்; விடுதலைப் புலிகள் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரை என்றும்,முன்பு விடுதலைப் புலிகள் கேம்ப் இருந்தது என்றும் சொன்னார்.

கலங்கரை விளக்கம்: மொத்தம் மூன்று லைட் ஹவுஸ்கள் உள்ளன, கோடியக்கரையில். ஒன்று பாரந்தகசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது, 120 வருஷத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. கடைசியா, 180 அடி உயரம் கொண்ட ஒரு லைட் ஹவுஸுக்கு. அமரர் கல்கி வாசகர்களுக்கு இது படு பரிச்சயம். அவர் வந்தியத்தேவனையும், பூங்குழலியையும், உலவவிட்ட இடம். இங்கிருந்துதான் ராஜராஜசோழன் இலங்கைக்குப் படை நடத்திச்சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 1200 வருஷங்களுக்கு முற்பட்ட அந்த லைட் ஹவுஸ் இன்றைக்கு உடைந்து சிதிலமடைந்து கிடக்கிறது.

அதுவும் சுனாமிக்குப் பிறகு இன்னும் மோசமாகிவிட்டதாம். அடுத்து 180 அடி உயரம் கொண்ட மூன்றாவது லைட் ஹவுஸ் கோடியக்காடு ஊரை ஒட்டி இருக்கிறது. தமிழகத்திலேயே உயரமான லைட் ஹவுஸ் என்றார்.

இதனையடுத்து அங்கு உள்ள சில மீனவர்கள் எங்களிடம் நீங்கள் எந்த ஊர் என்று வினவினார்கள்?நாங்கள் அதிராம்பட்டினம் என்று கூறினேன் … உடனே அவர்கள் உங்கள் பகுதி ஆண்கள் அதிகமானோர் வெளிநாடுகளில் தானே இருக்கிறார்கள் என்று கேட்டார் .அதற்கு ஆம் என்றோம் . அவர் நாங்கள் கடலுக்குள் சென்று கஷ்டப்படுகிறோம், அவர்கள் கடல் தாண்டி சென்று கஷ்டப்படுகிறார்கள் என்று கூறி விடை பெற்றார்.

கேள்விகள் பத்து!

1 பயணிகள் கோடியக்கரையில் வந்து தங்கிச் சுற்றிப்பார்க்க விடுதி எப்போது அமைப்பார்கள்?

2 உயரமான வியூ டவர் இல்லையே ஏன்?

3 வேதாரண்யத்திலிருந்து அகலமான சாலை வசதி வருமா?

4 கோடியக்கரை காடு உயிரியல் பூங்காவாகாதா?

5 கடலில் உல்லாசமாகச் சென்று வர படகுச் சவாரி கனவுதானா?

6 கோடிக்கரை காட்டைப் பற்றி புத்தகக் குறிப்புகள் ஏனில்லை?

7 மின்சார வசதி எப்போது சாத்தியம்?

8 பூங்காங்கள் மலராதா…?

9 நல்ல மீன்காட்சி சாலை அமைக்கும் யோசனை அரசாங்கத்துக்கு இருக்கா?

10 கடல்சார் தொழிற்சாலைகள் ஏன் அமையவில்லை….?

ஊர் வந்து இறங்கும் வரை நமக்கு விடை கிடைக்கவில்லை. எத்தனை காலத்துக்கு கேள்விகள் கேள்விகளாக இருக்கப்போகின்றன என்ற கேள்வியோடு தான் இந்தப் பயணக் கட்டுரையை முடிக்க வேண்டி இருக்கிறது!இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்  கோடியக்கரை உப்பளங்கள் பற்றி பார்க்கலாம்.

தொகுப்பு மற்றும் படங்கள்:

காலித் அஹ்மத் (அதிரை பிறை நிருபர்)


Advertisement

Close