பயணம்! பணம்! பாசம்! வெளிநாட்டு வாழ்க்கை குறித்த தொடர் – அறிமுகம்

பாரா தூரமாய் என் பாதங்கள்,
பாரா முகமாய் நீ செல்வதை பார்க்க முடியாமல்..

மீண்டும் பார்க்கிறேன்..
நீ பார்வையை கடந்து புள்ளியாய் தேய்ந்த போது..

கண்ணீரோடு…

அயல் தேசத்தில் அடகு வைக்கப்பட்ட
தன் இளமை பருவத்தை,
வயோதிகமான பின்பு,
தலைமுடிக்கு கலர் சாயம் பூசி,
தொலைத்த இளமையை மீட்டெடுக்க போராடும் தந்தையை பார்க்கும் போது,

கண்ணீர் இன்னும் வழிந்தோடுகிறது…

நான் சிறுவனாய் இருக்கும் போது,
எனது தந்தை அயல் தேசத்தில் இளமையை கழித்து விட்டார்..

நான் இளமை பருவத்தை அடைந்து,
அயல்தேசம் வந்த போது,
எனது தந்தை வயோதிகத்தால் நாடு திரும்பி விட்டார்..

கடிதங்களாலும்,
தொலைப்பேசி அழைப்புகளாலும்
அன்பு பறிமாற்றம் நடந்த போதும்,
அருகாமையில் கிடைக்கும் அன்பையும்,
அரவணைப்பையும் இழந்தது எனக்குள் இன்னும் வெற்றிடம் போலவே காட்சியளிக்கிறது..

அடுத்த தலைமுறைக்காகவது இந்நிலை மாற வேண்டும்..

-அச்சன்புதூர் செய்யது சேக்

Advertisement

Close