கத்தாருக்கு தொழில் வாய்ப்புத்தேடி செல்கிறீர்களா? நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் இவை!

வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்தோ, நாட்டில் இருக்கும் கஷ்டமான நிலையிலோ பெரும்பாலான தமிழர்கள் இன்று கத்தார் நோக்கி படையெடுக்கிறார்கள்.

ஒரு சிலர் கத்தார் வந்து வேலையை தேடிக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் இருந்து முகவர்கள் ஊடாக வேலையை தேடிக்கொள்கிறார்கள்.முகவர் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக தொழிலாளர்களை கவர்கிறார்கள்.

ஒரு லேபருக்கு 1200 ரியால் சம்பளம் என்றால் விளம்பரத்தில் மாதாந்தம் 43,000 சம்பளம் என குறிப்பிடுகிறார்கள். இதன்போது மிக தந்திரமாக கத்தாரில் வாழ்க்கைச்செலவு மறைக்கப்படுகிறது. கத்தாரில் மிக அடிப்படையான வாழ்க்கைச்செலவுகள் உணவு – மாதாந்தம் 300 ரியால் தேவை.

தொலைபேசி – ஆகக்குறைந்தது 50 ரியால்கள் தேவை. ஆனால் தனிமையில் வாடும் நம்மவர்கள் அடிக்கடி உறவினர்களுடன் நண்பர்களுடன் பேசுவதால் மிகப்பெரும்பாலானவர்கள் தொலைபேசிக்கு இதை விட பன்மடங்கு செலவிடுகிறார்கள்.

இந்த அடிப்படை செலவுகள் மட்டுமே 350 ரியால்கள் ஆகின்றது. 1200 ரியாலுக்கு வரும் லேபரினால் மாதாந்தம் ரூபா 30,000 மட்டுமே வீட்டிற்கு அனுப்பமுடியும். இந்த 30,000 ரூபாவுக்காக 45 டிகிரி வெயிலில் பாலைவனத்தில் வேலை செய்ய தயாரா என்பதை ஒரு முறை பரிசீலிக்கவேண்டும். 

தொழில் ஒப்பந்தத்தில் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

தொழில் தருனரின் பெயர், இடம் நீங்கள் வேலை செய்யவிருக்கும் கம்பனி பற்றி நன்கு விசாரித்து அறிந்துகொள்ளுங்கள்.

அதோடு நீங்கள் வேலை செய்யவேண்டிய இடம், தங்குமிடம் பற்றியும் விசாரியுங்கள். போக்குவரத்து வசதியில்லாத, பக்கத்தில் ஒரு கடை கூட இல்லாத இடங்களில் எல்லாம் எம்மவர்கள் மாட்டிக்கொண்டு கஷ்ட்டப்படுகிறார்கள். ஒரு அறையில் எத்தனை பேர் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பதில் கட்டாயம் கவனம் செலுத்தவும். மேலும் தங்குமிடமிருந்து வேலைத்தலத்திற்கான போக்குவரத்து வசதியை நிறுவனம் செய்து தரவேண்டும்.

அல்லது பொருத்தமான அலவன்சை கோருங்கள். (கத்தாரில் போக்குவரத்து செலவு மிக அதிகம்).

ஒப்பந்தத்தின் காலம்காலவறையற்ற ஒப்பந்தங்களில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கும் நிறுவனங்களும் கத்தாரில் உண்டு. இது மிக ஆபத்தான ஒப்பந்தமாகும். ஒரு வருட ஒப்பந்தமே தொழிலாளிக்கு பாதுகாப்பானதாகும். இருந்தாலும் குறைந்தது இருவருட ஒப்பந்தத்தையாவது பெரும்பாலான நிறுவனங்கள் திணிக்கின்றன.

சம்பளம் வழங்கும் தேதி கத்தாரில் சில பெரிய நிறுவனங்கள் கூட சம்பளத்தை  சரியான தேதிக்கு வழங்குவதில்லை. தொழில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்னர் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் இது பற்றி கட்டாயம் விசாரிக்கவும்.

சம்பளம்பெரும்பாலான நிறுவனங்கள் உங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை அலவன்சாகவே காட்ட விளைவார்கள். முடியுமானவரை சம்பளத்தின் பெரும்பகுதி ”பேசிக்” இல் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பல கணிப்பீடுகளில் “பேசிக்” மட்டுமே கவனத்தில் எடுக்கப்படும்.

வேலை நேரம்நீங்கள் எத்தனை மணித்தியாலம் வேலை செய்யவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கத்தார் சட்டப்படி தொழிலாளியை வாரம் ஒன்றிற்கு 48 மணித்தியாலம் “பேசிக்” சம்பளம் கொடுத்து வேலை வாங்கமுடியும். 6 நாட்கள் வேலை செய்யவேண்டிய நிறுவனம் என்றால் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலமும், 5 நாட்கள் வேலை என்றால் 9 1/2 மணித்தியாலமும் இருக்கும். சில நிறுவனங்களில் 5 நாட்களுக்கு 9 மணித்தியாலங்களும் வியாழக்கிழமை அரை நாளாகவும் (3 மணித்தியாலம்) இருக்கும்.

வாராந்த ஓய்வு வாராந்தம் ஒரு நாள் விடுமுறை இருக்கிறதா என்று பாருங்கள். சிலர் கடைகளுக்கு வேலைக்கு சென்று வாரம் ஒரு நாளாவது விடுமுறை இல்லாமல் கஷ்ட்டப்படுகிறார்கள்.

விடுமுறைஒவ்வொரு வருடத்திற்கும் ஆகக்குறைந்தது 21 அல்லது 30 (5 வருடங்களுக்கு மேல் சேவையாற்றுபவர்களுக்கு) நாள் சம்பளத்துடனான விடுமுறை நாட்டிற்கு செல்ல வழங்கப்படவேண்டும். நாட்டிற்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டை (டிக்கட்) நிறுவனம் தருகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ”லேபர்” தர தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையே ”டிக்கட்” தருகிறார்கள்.

Full Package என்றால் என்ன?சில நிறுவனங்கள் புல் பக்கேஜ் என்ற அடிப்படையில் சம்பளம் பேசுகிறார்கள். இதன் அர்த்தம் கம்பனி உங்களின் தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த செலவுக்கும் பொறுப்பில்லை என்பதாகும். தொழிலாளர்கள் தனது சம்பளத்திற்குள்ளேயே இவற்றை ஏற்பாடு செய்யவேண்டும்.

Advertisement

Close